சமூகவியல் கல்வி பொருளாதாரம் வேளாண்மை வெளியுறவு குடியுரிமை என்று நாட்டின் அனைத்து துறைகளிலும் அனைத்து விவகாரங்களிலும் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு கருத்து இருக்கிறது.
ஒரு வலிமையான சித்தாந்த பின்புலத்தில் தான் அனைத்து துறைகளுக்குமான கொள்கை முடிவுகளை எடுப்பதும் அதில் உருவாகும் விவகாரங்களுக்கு தீர்வளிக்கவும் செய்கின்றனர்.
இடது சாரிகள் மார்க்சிய தத்துவத்தின் மூலமாக மனித வாழ்வின் அனைத்தையும் பொருளாதார கண்ணோட்டத்திலேயே சிந்தித்து முதலாளித்துவ எதிர்ப்பை முன்னிறுத்தி நாட்டின் அனைத்து விவகாரங்களுக்கும் தீர்வுகளை முன்னிறுத்துகின்றனர்.
சங் பரிவார் அமைப்புகள் இந்துத்துவ சிந்தாந்த பின்புலம் மற்றும் சியோனிச இஸ்ரேல் ஆதரவுடன் முஸ்லிம் வெறுப்பை முன்னிறுத்தி அமெரிக்க முதலாளித்துவ நிழலில் நின்று அனைத்து விவகாரங்களையும் அணுகுகின்றனர்.
காங்கிரஸ் கட்சி தனது துவக்க காலத்தில் காந்தி மற்றும் குமரப்பாவின் கிராம பொருளாதார பின்புலத்தில்,நேருவின் சோசலிச மதச்சார்பின்மை சார்பு அரசியல் மற்றும் அணிசேரா நாடுகள் இயக்கத்தின் வெளியுறவு கொள்கை அடிப்படையில் அனைத்தையும் அணுகியது.
பிறகு மன்மோகன் சிங், சிதம்பரம், மாண்டேக் சிங் அலுவாலியா,சாம் பிட்ரோடா,போன்ற அமெரிக்க பல்கலைக்கழக பட்டதாரிகளின் கைகளில் சிக்கி முழு முதலாளித்துவ கட்சியாக மாறி இன்று தனது சுயத்தை இழந்து தவிக்கிறது.
எந்த விவகாரத்தில் எந்த கொள்கையை பின்பற்றுவது என்பது குறித்த தெளிவு இப்போது அவர்களுக்கே இல்லை.
முஸ்லிம்களின் நிலை என்ன ?
இந்திய நாட்டில் வாழும் 25 கோடி முஸ்லிம்களும் இந்திய நாட்டின் கல்வி அரசியல் பொருளாதாரம் வேளாண்மை வரிவிதிப்பு வெளியுறவு உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் எப்படி அணுக வேண்டும் என்பதற்கு ஒரு தனித்துவமான கல்வியியல் வழிகாட்டுதல் (Academical Guidance) இதுவரை இல்லை.
இதன் காரணமாக இஸ்லாமிய சித்தாந்த பின்புலத்தில் நாட்டின் எந்த ஒரு விவகாரத்திற்கும் தெளிவான கருத்தை முன்வைக்க முஸ்லிம்களால் இயலவில்லை.
இதன் நீட்சியாக சமூக அரசியல் விவகாரங்கள் அனைத்திலும் முஸ்லிம் செயற்பாட்டாளர்கள் மற்றும் அமைப்புகளுக்கிடையில் இஸ்லாமிய இலக்குடன் கூடிய ஒரு பொதுக்கருத்து வளர்ச்சியடையவில்லை.
சில விவகாரங்களில் இடது சாரிகள் கருத்தையும் சில விவகாரங்களில் காங்கிரசின் முதலாளித்துவ கருத்தையும் கடன் வாங்கிக்கொண்டு அதை முஸ்லிம்களின் கருத்தாக முன்வைக்கின்றோம்.
இன்னும் தெளிவாக சொல்வதென்றால் சங் பரிவார் அமைப்புகளை எதிர்ப்பவர்கள் அனைவரும் முஸ்லிம்களின் நண்பர்கள் அவர்களின் தீர்வுகள் அனைத்தும் நம்முடைய தீர்வுகள் என்பது தான் தற்போதைய நமது நிலை.
நாட்டின் அனைத்து நவீன கால விவகாரங்களுக்கும் நிரந்தர தீர்வளிக்கும் இஸ்லாமிய சித்தாந்தத்தை துறை வாரியாக பொதுமக்கள் மன்றத்தில் முன்வைக்கும் அறிஞர் பெருமக்களை உருவாக்குவதில் இனியும் நாம் தாமதிக்க கூடாது.
அதற்கு முஸ்லிம்களின் பாரம்பரிய அறிவுத்துறை உயிர் பெற வேண்டும்.
மத்தியகால இஸ்லாமிய பேரரசுகள் பின்பற்றிய சிந்தனைப் பள்ளிகளின் சட்ட நூல்கள் (மத்ஹபு கிதாப்கள்) தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு அவற்றின் வழிகாட்டுதலில் நின்று இன்றைய குடியரசு இந்தியாவின் விவகாரங்கள் ஒவ்வொன்றையும் எப்படி அணுகுவது என்பது குறித்து ஆழமான ஆய்வுகளும் அழகிய விவாதங்களும் சமூகத்தில் நடைபெற வேண்டும்.
மத்ஹபு கிதாபுகளில் ஒவ்வாமை உள்ளவர்கள் நேரடியாக அல்குர்ஆன் ஹதீஸ் மூலாதாரங்களில் இருந்து இன்றைய சமூக அரசியல் விவகாரங்களுக்கு தீர்வுகளை முன்வைக்கும் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை உருவாக்க வேண்டும்.
எது ஒன்றுக்கும் நிரந்தர தீர்வளிக்கும் தனித்துவமான சித்தாந்தத்தைக் வைத்திருப்பவர்கள் முஸ்லிம்கள் என்ற கருத்து பிற சமூக அறிஞர் பெருமக்களிடம் ஆழமாக வேரூன்றுவதற்கு இது வழிவகை செய்யும்.
இழந்த பெருமைகளை மீட்பதற்கும் பெருகிவரும் முஸ்லிம்களின் சமூக அரசியல் நெருக்கடிகளை நிரந்தரமாக குறைத்திடவும் இது பாதை அமைத்துத் தரும்.
எழுத்தாளர் :- CMN Saleem