புதிய பாதைகளை உருவாக்கும் முயற்சிகள்

by Mohamed Anas

யானை கழிவிலிருந்து காகிதம் தயாரிக்கும் தொழில்நுட்பம் ஆசிய நாடுகளில் வளர்ந்து வருகின்றன.

இலை தழைகளை உண்டு வாழும் யானையின் கழிவுகளில் நார்ப்பொருள் அதிகம் இருப்பதால் அதிலிருந்து காகிதம் தயாரிக்கப்பட்டு உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாவது அதிகரித்து வருகின்றன.

உலகில் ஆண்டிற்கு ஆயிரத்து நூறு கோடி உயிர் மரங்கள் வெட்டிச் சாய்க்கப்படுகின்றன. பூமியின்  நுரையீரலாகத் திகழும் இந்த மரங்களில் 40 சதவிகிதம் காகித உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்றன.

தென்னமெரிக்க மலைக்காடுகளில் வெட்டப்படும் உயிர் மரங்கள் அதிகமானவற்றில் இருந்து தயாரிக்கப்படும் காகிதத்தை அமெரிக்கர்கள் தங்களின் கழிவறை துடைப்பான்களாக பயன்படுத்தும் கேவலமும் நம் கண்முன் தான் நடக்கிறது.

இப்படி காகிதத்திற்காக மரங்களை வெட்டிச் சாய்ப்பதை குறைப்பதற்கு இயற்கை ஆர்வலர்கள் பலர்  பல்வேறு புதிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.அதில் மிக முக்கியமானது யானையின் கழிவிலிருந்து காகிதம் தயாரிக்கும் தொழில்நுட்பம்.

இலங்கையைச் சேர்ந்த துஷாந்த் என்பவர் 20 ஆண்டுகளுக்கு முன்பாக யானை கழிவிலிருந்து காகிதம் தயாரிக்கும் சோதனை முயற்சியை சொந்த செலவில் துவங்கினார்.

யானை ஒருநாளைக்கு 16 முறை கழிவுகளை வெளியேற்றுகிறது.12 யானைகள் இருந்தால் ஒரு நாளைக்கு ஒரு டன் கழிவுகள் கிடைக்கும்.இலங்கையில் யானை காப்பகங்கள் அதிகமாக உள்ளதால் காகிதம் தயாரிப்பதற்கு தடையின்றி மூலப்பொருள் கிடைக்கிறது. 

துஷாந்தின் Eco Maximus என்ற நிறுவனத்தின் யானை கழிவு காகிதம் உள்ளிட்ட அச்சிடப்பட்ட பாடப் புத்தகங்கள் இலங்கை முழுவதும் விற்பனை யாகின்றன. மட்டுமல்ல உயர்ந்த தரத்தில் இருப்பதால் அவை 30 நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.

உலகில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் இந்த யானை கழிவு புத்தகங்களை அறிவுள்ள மக்கள் அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர். இதனால் மரம் வெட்டப்படுவது குறைகிறது.  

இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் யானை கழிவிலிருந்து காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இப்போது இயங்கி வருகின்றன.

இதுபோன்ற புதிய முயற்சிகளால் தான் தொழில் துறையில் சாம்ராஜ்யங்களை உருவாக்க முடியும். முஸ்லிம்களிடம் ஆராய்ச்சி சிந்தனையும் புதிய முயற்சிகளும் மிக குறைவாக இருக்கிறது.

பெட்டிக் கடை அல்லது திருவிழா கடை மனோபாவம் மிகைத்திருப்பதால் காலத்தை கடந்து நிற்கும் தொழில் நிறுவனங்களை உருவாக்கிட இயலாமல் போகிறது.

ஆராய்ச்சிக்கும் புதியமுயற்சிக்கும் அதிகமாக செலவிட வேண்டும்.அது வெற்றியடைந்தால் சிறப்பு. தோல்வியடைந்தால் மிகச்சிறப்பு.காரணம்  தோல்வியில் தான் கல்வி இருக்கிறது.

– CMN SALEEM

—————————————

Source :

https://www.youtube.com/watch?v=lmwOA44UZwY&t=39s

https://ecomaximus.com/

Related Posts