கேரள முஸ்லிம்களின் ஓதுபள்ளிகள்

by Mohamed Anas

இஸ்லாமிய சமூகத்தை முறைப்படி உருவாக்கும் வழிமுறையை நபி (ஸல்) அவர்கள் மக்காவில் நபித்தோழர் அர்க்கம் (ரலி) அவர்களின் வீட்டில் வைத்து துவக்கி வைத்தார்கள்.மதீனாவிற்கு புலம் பெயர்ந்த பிறகு மஸ்ஜிதுன் நபவி பள்ளியில் முறைப்படியான பாடசாலை துவங்கப்பட்டது.

பத்ர் போர்க்களத்தில் பிடிபட்ட போர் கைதிகளுக்கு  விடுதலைக்கான பிணையத் தொகையாக தாங்கள் கற்றறிந்த மொழி இலக்கியம் வரலாறு வணிகம் கைத்தொழில் போன்ற உலகியல் கலைகள் எதையாவது ஒன்றை மதீனாவில் வாழும் முஸ்லிம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்து விட்டு விடுதலையாகிக் கொள்ளலாம் என்று எதிலும் அறிவை முதன்மைப்படுத்துவதிலும், தொடர்ச்சியான கற்பித்தல் மூலமாகவும் தான் வலிமையான இஸ்லாமிய சமூகத்தை கட்டமைக்க முடியும் என்பது நபி (ஸல்) அவர்கள் காட்டிய பாதை.

நபி (ஸல்) அவர்களின் பாதையை பின்பற்றி ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் தான் தலைமையேற்றிருந்த இஸ்லாமிய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில், முறைப்படியான, குறிப்பிட்ட காலஅளவு கொண்ட, பள்ளிக்கல்வி (மதரஸா) மூலம் ஆற்றல் நிறைந்த முஸ்லிம் சமூகத்தை கட்டமைக்க முடியும் என்பதை ஆட்சிப்பகுதி முழுவதும் நடைமுறைப்படுத்தி காட்டினார்கள்.

அதன் பிறகு உலகில் அமைந்த சிறிய பெரிய முஸ்லிம் அரசுகள் அனைத்தும் அந்த வழிமுறையை அப்படியே பின்பற்றி தங்களது ஆட்சிப்பகுதியில் முஸ்லிம் பிள்ளைகளின் ஆரம்பக் கல்வி பள்ளிவாசலில் உள்ள அல்குர்ஆன் பாடசாலையிலிருந்து (மக்தப்) தான் துவங்கப்பட வேண்டும் என்பதை முஸ்லிம் சமூகவாழ்வின் மூலாதாரமாக முன்னிறுத்தினார்கள்.

முஸ்லிம் அரசு அமையாத நாடுகளில் வாழ்ந்த முஸ்லிம்கள் தங்களின் பிள்ளைகளுக்கு ஆரம்பக்கல்வி வழங்கும் பொறுப்பை அந்தந்த மஹல்லா நிர்வாகமே ஏற்று சிறப்பாக நடத்தியது. அதனுடைய நீட்சிதான் தமிழகத்தில் இன்று இயங்கும் மக்தப் (ஆரம்பக் கல்வி) மதரஸாக்கள் (பள்ளிக் கல்வி).

தமிழகத்தில் அமைந்த மக்தப் மதரஸாக்களில் அல்குர்ஆன் போதிக்கப்படுவதால் புண்ணியம் கருதி அதன் இயங்குதலுக்கு தேவையான பொருளாதாரத்திற்கு ஏராளமான நிலங்களை தமிழ் மன்னர்கள் வழங்கியுள்ள வரலாறும் நம் கண்முன் தான் இருக்கிறது.        

பாரம்பரியமான முஸ்லிம் குடும்பங்களும் தனிப்பட்ட செல்வந்தர்களும் இந்த கல்விப் பணிகளுக்கும் பள்ளிவாசலில் மேற்கொள்ளப்படும் இறை பணிகளுக்கும் ஏராளமான சொத்துக்களை தானமாக வழங்கியுள்ளதையும் நாம் அறிந்து தான் வைத்திருக்கின்றோம்.

இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகால வரலாறு கொண்ட மக்தப் என்ற இந்த அல்குர்ஆன் பாடசாலைகள் தமிழக பள்ளிவாசல்களிலும் உலமாக்களின் வீடுகளிலும் பக்தியுடன் உயிரோட்டமாக நடைபெற்று வந்தது. கடந்த 50 ஆண்டுகாலமாக ஏராளமான முஸ்லிம் குடும்பங்கள் நகரங்களை நோக்கி புலம்பெயர்ந்ததும்,மஹல்லா நிர்வாகத்தை பலவீனப்படுத்திய உள் நெருக்கடிகள் காரணமாகவும், பிள்ளைகளின் கல்வியில் தனித்துவத்தை கடைபிடிக்காமல் பொது நீரோட்டத்தில் கலந்ததும், உலமாக்களே மக்தப் முறை மீதான பிடிமானத்தை தளர விட்டதுமாக சேர்ந்து முஸ்லிம் சமூகத்தில் அல்லாஹ்வின் வேதத்தை கற்பிக்கும் இந்த மக்தப்கள் அதன் முக்கியத்துவத்தை தற்காலிகமாக இழந்து நிற்கின்றன.

இந்த அவலநிலை கேரளாவில் ஏற்பட்டு விடாமல் உலமாக்களின் அமைப்பு தொடர்ந்து பாதுகாத்து வருகிறது.

நாடு குடியரசாக மலர்ந்த பிறகு கல்வி நிறுவனங்களில் மதக்கல்வி இல்லை என்று நேரு அரசு முடிவெடுத்தபோது அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பிரிவு வழங்கும் மதச் சுதந்திரத்தை பயன்படுத்தி கேரள முஸ்லிம் தலைவர்களும் உலமாக்களும் தங்கள் சமூகத்தின் தனித்துவமான கல்வி அமைப்பை சட்டத்திற்கும் அரசின் வழிகாட்டுதலுக்கும் உட்பட்டு அவர்களே கட்டமைத்தனர்.  

உயிரைவிட மேலான மார்க்க கல்வியை எந்த சூழலிலும் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுக்க உரிமை இல்லாத முஸ்லிம்கள் கேரளாவில் புதிதாக ஒரு பள்ளிக்கல்வி வாரியத்தையே  உருவாக்கினார்கள்.அதுதான் Samastha Kerala Islam Matha Vidyabhyasa Board என்ற நிறுவனம். இந்திய நாடு குடியரசு ஆன அடுத்த ஆண்டு 1951 இல் துவங்கப்பட்டது.

இஸ்லாத்திற்கு இடையூறுகள் புதிது புதிதாக உருவாகிக் கொண்டும் அது பெருகி கொண்டும் தான் இருக்கும்.எதிர்ப்புகளை திறனோடு எதிர்கொண்டு உம்மத்தில் இஸ்லாத்தை நிலை நிறுத்துவதற்கும் அதை மனித சமூகத்தில் விரிவாக்கம் செய்வதற்குமான வாய்ப்புகளை கண்டறிவது தான் அறிவார்ந்த சமூகத்தின் கடமை.

14 மாவட்டங்கள் 6 மாநகராட்சிகள் 87 நகராட்சிகள் 941 கிராம பஞ்சாயத்துகள் கொண்ட கேரளாவில் இன்று  ஏறக்குறைய 9 ஆயிரம் ஓதுபள்ளிகளுடன் (மக்தப்) கூடிய பள்ளிக்கூடங்கள் இந்த SKIMV போர்டு என்ற பள்ளிக்கல்வி வாரியத்தில் இணைவு பெற்றுள்ளன. வெளிநாடுகளிலும் பல பள்ளிக்கூடங்கள் இயங்குகின்றன.முஸ்லிம் அல்லாத ஆயிரக்கணக்கான பிள்ளைகளும் இந்த மதரஸாக்களில் படிக்கின்றனர்.    

ஒரு இலட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பத்தரை இலட்சம் பிள்ளைகளுக்கு குர்ஆன் பாடங்களுடன் பள்ளிப் பாடங்களும் இணைத்து நடத்தப்படுகின்றன.12 ஆண்டுகள் பள்ளிக்கல்வி முடிக்கும் முஸ்லிம்கள் அனைவரும் அல்குர்ஆனை நன்கு ஓதத்தெரிந்தும் அரபு மொழித்திறனோடும் ஷரீஅத்தின் அடிப்படைகளை கற்றும்  வெளிவருகின்றனர்.    

ஆசிரியர்களின் ஊதியம்,ஓதுபள்ளிகளின் நிர்வாக செலவுகள் உள்ளிட்ட அனைத்தையும் அந்தந்த மஹல்லா நிர்வாகம் பொறுப்பெடுத்துக் கொள்கிறது. ஓதுபள்ளி இல்லாத பள்ளிவாசல்களே கேரளாவில் இல்லை. இந்த மகத்தான கல்விச் சாதனை ஒரு சில ஆண்டுகளில் ஒருசில மனிதர்களால் ஏற்பட்டவை அல்ல.முழு கேரளாவையும் சென்றடைய 70 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.

தமிழகத்தில் அல்குர்ஆனை ஓதத்தெரியாத இரண்டு தலைமுறையை உருவாக்கி வைத்திருக்கும் பெருமைக்குரிய புரட்சி வீரர்களாகிய நாம் தான் அரசை குற்றம் சுமத்துவதிலும் வெளி எதிர்ப்புகளை காரணம் காட்டுவதிலும் சமூகத்தின் கவனத்தை திருப்பிக் கொண்டிருக்கின்றோம்.

3.5 கோடி மக்கள் தொகையுடைய கேரளாவில் முஸ்லிம்கள் 26.5 விழுக்காடு வாழ்கின்றனர். அவர்களிலும் பல குழுக்கள் கோஷ்டிகள் குழிபறிப்புகள் கொள்கை சிக்கல்கள் தமிழகத்தை காட்டிலும் கூடுதலாக இருக்கத்தான் செய்கின்றன. அவ்வப்போது அடிதடி சண்டைகள்  விவாதங்கள் நடக்கத்தான் செய்கின்றன.

ஆனால் யாரும் எந்த பிரிவும் அல்குர்ஆனை, ஷரீஅத்தை தங்களது சந்ததிகளுக்கு முறைப்படி கடத்தும் இறை பணியை முதன்மைப்படுத்தி செய்யாமல் இருந்ததில்லை.எல்லா பிரிவுகளும் அமைப்புகளும் சொந்தமாக கல்வி நிறுவனங்களை ஏறக்குறைய இலவசமாக நடத்துகின்றனர். அதனால் தான் கல்வித்துறையில் இந்தியத் துணைக்கண்ட முஸ்லிம்களின் முன்னோடிகளாக திகழ்கின்றனர்.

தமிழகத்தில் முஸ்லிம்களின் தனித்துவமான கல்விமுறையை பாதுகாப்பதில் மேம்படுத்துவதில் நமது முன்னோர்கள் எடுத்த முயற்சியில் செய்த தியாகத்தில் ஒரு சிறு அளவு கூட பட்டதாரிகளாகி பொருளாதார வளமும் கூடியுள்ள இந்த தலைமுறை முன்னெடுக்கவில்லை.

நம் கண்முன்னாலேயே முன்னோர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய மதரஸாக்கள் மூடுவிழா நடத்தப்படுகின்றன எந்த சலனமும் இல்லாமல் கடந்து போகிறோம்.

அரசின் புதிய கல்வி கொள்கையை குறை கூறுவதிலேயே சமூகத்தின் முழு கவனத்தையும் திருப்பி நமது அறியாமையையும் அலட்சியத்தையும் தொடரப் போகிறோமா அல்லது நமது பாரம்பரிய கல்வியை மீட்டெடுக்கும் முயற்சியில் களம் இறங்கப் போகிறோமா என்பதை இந்த கட்டுரையை வாசிக்கின்ற நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

– CMN SALEEM

Related Posts