குலவை இடுதல்

by Mohamed Anas

தமிழர் பண்பாட்டுத் தொடரில் வீரத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவதற்கு பெண்கள் கையாண்ட நயமிக்க இந்த குலவை ஓசை வார்த்தைகளால் விவரித்துவிட முடியாத மனக் கொண்டாட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.

அவரவரின் சாதி மத நம்பிக்கை மற்றும் சடங்குகளின் அடிப்படையில் பெண்களின் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும் தமிழர் நில மரபாக பல நூற்றாண்டுகளாக  பின்பற்றப்பட்டு வந்தது. வருகிறது.

25 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழக முஸ்லிம் வீடுகளில் நடைபெறும் விழாக்கள் அனைத்திலும் இந்த குலவை இடுதலை பரவலாக காணமுடிந்தது. இன்றைய குடும்ப விழாக்கள் போல அல்லாமல், உள்ளங்களில் கசடு இல்லாமல் உறவுகள் நட்புகள் அனைவரும் கூடி மகிழ்ந்த அன்றைய உயர்ந்த நாகரிக விழாக்கள் பெற்றிருந்த தனிச்சிறப்பு அது.

ஆப்ரிக்க அரபு பாரசீக மண்ணில் வாழும் பழங்குடி மக்கள் தங்களின் மகிழ்ச்சியையும் வீரத்தையும் வெளிப்படுத்த பயன்படுத்தும் இந்த குலவை ஓசை கலாச்சாரம் எப்படி தமிழகம் கேரளா இலங்கை போன்ற தென்னிந்திய பகுதிகளுக்கும் ஒரிசா வங்காளம் போன்ற கிழக்கு கடற்கரை பகுதிகளுக்கும் பரவியது என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டும். 

தமிழர்களின் மூவாயிரம் ஆண்டுகால கடல் வாணிபம் பரிமாறிக்கொண்ட கலாச்சார பெருமைகளாக இவை இருக்கலாம். இஸ்லாத்தின் அறிமுகத்திற்குப் பின் தென்னிந்தியாவில் தோன்றிய அரபு  – தமிழ் இனகலப்பின் மூலம் இந்த குலவை ஓசை முஸ்லிம் குடும்ப விழாக்களில் சில ஒழுங்குமுறைகளோடு புகுந்திருக்கலாம். விழாக்காலங்களில் பெண்களின் மகிழ்ச்சி குறியீட்டின் ரகசிய சொற்களாக இந்த குலவை ரீங்காரம் ஒலித்திருக்கலாம்.

நவீன கல்வி, நாகரிகம் என்ற பெயரில் வஞ்சகமாக வணிகத்திற்காக நம்மிடம் இருந்து பிடுங்கப்பட்ட நம் உள்ளத்தை மகிழ்வித்த நமது மரபு வழக்கங்கள் கொஞ்சமல்ல.

நவீன கால இஸ்லாமிய அறிஞரான அஷ்ஷெய்க் பின் பாஸ் அவர்கள் ஷரீஅத்தை மீறாத வகையில் “ஸகாரீது” என்ற குலவை இடுவது ஏற்புடையதே என்று தீர்ப்பு கொடுத்துள்ளார்.

மக்கள் ஆண்டாண்டு காலமாக பின்பற்றி வரும் சமூக கலாச்சார வழக்கங்களில், முறைபடுத்துதலுக்கும்  – முற்றாக அகற்றுதலுக்கும் உள்ள வேறுபாடுகளை அறியாமல் கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களின் விளைவுகள் மிக கடுமையாக இருக்கும் என்பதை சற்று நிதானமாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

– CMN SALEEM

Related Posts