உங்கள் மஹல்லாவில் நீங்கள் முன்னெடுக்க வேண்டிய இரண்டு வேலைகள்.

by Mohamed Anas

பரபரப்பான அரசியல் நடப்புகளிலும்,அதிகப்படியான பொழுதுபோக்கு அம்சங்களிலும்,தங்களுக்கு இடையிலான குழுச்சண்டையிலும், கோஷ்டிப் பூசலிலும் அதிகப்படியான மக்களின் நேரமும் சிந்தனையும் முடங்கிப்போயுள்ளன என்றால் மறுபக்கம் அந்த மக்களின் பண்பாடுகள் சிதைக்கப்பட்டு வளங்கள் சூறையாடப்பட்டு வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு பல தலைமுறைகளை வறுமையிலும் அறியாமையிலும் தள்ளும் வேலைகள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

வளர்ச்சி நவீனம் நாகரிகம் என்ற முதலாளித்துவத்தின் மாயவலையில் சிக்கி மதிமயங்கி கிடந்த நாம் இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தால் கொஞ்சம் விழிப்புணர்வு பெற்றுள்ளோம் என்பதை மறுக்க இயலாது. இன்றைய நெருக்கடி நிலை நமக்குள் ஏற்படுத்திய எச்சரிக்கை உணர்வு காரணமாக நமது உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கும் உணவுகளைத் தேடி உண்ணத் துவங்கியுள்ளோம்.இது அல்லாஹ்வின் கருணையே அன்றி வேறில்லை.

கடந்த 50 ஆண்டுகளாக பசுமைப்புரட்சி என்ற பெயரில் நாட்டின் பாரம்பரிய நெல்ரகங்களை ஒழித்துக்கட்டி  ஆய்வகங்களில் (Lab) தயாரித்த நெல்ரகங்கள் தானியங்கள் காய்கறிகள் உள்ளிட்டவற்றின் விதைகளை வலுக்கட்டாயமாக விவசாயிகளிடம் திணித்து அவற்றுக்கு இரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்த நிர்பந்திக்கப்பட்டதால் உண்டான நாசம் தான், இன்று உற்பத்தியாகி சந்தைக்கு வரும் பெரும்பாலான அரிசி தானியங்கள் காய்கறி கீரை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் எதிலும் நமது மண்ணிற்கே உரித்தான மனமும் மருத்துவ குணமும் இல்லாமல் அணைத்து உணவுப் பொருட்களும் அதன் தகுதியை இழந்து நோஞ்சான்களாக மாறி நிற்கின்றன. மட்டுமல்ல மண்ணும் மலடாகிப்போய் நிலத்தடி நீரும் விஷமாகி வருகிறது.

முதலாளித்துவ கார்ப்பரேட்டுகளின் சூழ்ச்சிகளும் பேராசைகளுமே இதற்கு மூல காரணம். இன்றைய கல்விக்கும் அறிவியல் ஆய்வுகளுக்கும் வளர்ச்சி நவீனம் நாகரிகம் என்ற பெயர் சூட்டி அவற்றை மனித குலத்திற்கு எதிராக, அல்லாஹ்வின் அமானிதங்களான சக உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலிற்கும் எதிராக பேரழிவை ஏற்படுத்தும் இப்படிப்பட்ட யுத்தம் உலக வரலாற்றில் முன்னெப்போதும் நடைபெற்றது கிடையாது. அல்லாஹ்வின் படைப்புகள் அனைத்தையும் மொத்தமாக நாசமாக்கும் படுபயங்கர யுத்தம் இது.இவை எல்லாவற்றையும் நீதமாக நிரந்தரமாக மாற்றும் வல்லமை இஸ்லாம் ஒன்றுக்கு மட்டுமே இருக்கிறது என்பதால் தான் முஸ்லிம்களை உணர்ச்சிப்பூர்வமாக தூண்டி கொதிநிலையிலேயே வைத்திருப்பதில் கவனமாக இருக்கின்றனர்.

அமைதியும் நிதானமும் இல்லாத மக்களால் அவர்களின் சிக்கல்கள் என்னவென்றே அறிந்து கொள்ள இயலாது.அறிவுத்துறையில் அதிகம் ஈடுபாடு காட்ட இயலாது.வணக்க வழிபாடுகளுமே அவசர கோலத்தில் இயந்திரத்தனமாக நிறைவேற்றப்படும் நிலை உண்டாகும் இன்று முஸ்லிம் சமூகத்தில் அவை பரவலாக நடப்பதை பார்க்கலாம். மாற்றத்திற்கான முயற்சியை நமது மஹல்லாக்களில் இருந்து துவங்குவோம்.முதலில் உயிர்வாழ்வதே ஆபத்தாக மாறிவரும் இந்த நிலை குறித்து முஸ்லிம் உம்மத்தை பயிற்றுவிக்க வேண்டும். விழிப்புணர்வு இல்லாத சமூகம் மாற்றத்திற்கு ஒருபோதும் ஒத்துழைக்காது. மாற்றங்கள் குறித்து பேசுபவர்களை கூட அறியாமையால் எள்ளி நகையாடும்.

மஹல்லாக்களில் இரண்டு விதமான வேலைகளை முன்னெடுக்க வேண்டும். 

ஒன்று  :

ஊரின் நலச்சங்கங்கள் மற்றும் ஜமாஅத் அறக்கட்டளைகள் மூலம் மஹல்லாவிலும் அதனைச்சுற்றி வாழும் விவசாய குடிகளிலும் ஆண்டிற்கு 5 மாணவ மாணவிகளை தேர்ந்தெடுத்து வேளாண்மை படிக்கவைக்க வேண்டும். முதுநிலை (PG) மற்றும் ஆய்வுப் படிப்புகளை (Ph.D) இயற்கை வேளாண்மை, உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ள வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து அவர்களின் கல்விச் செலவுகளை முழுமையாக பொறுப்பெடுத்துக் கொள்ளுங்கள்.சமூகத்தால் பயிற்றுவிக்கப்படாத பிள்ளைகளிடம் சமூக சிந்தனையை எதிர்பார்ப்பது இயற்கைக்கு எதிரானது.

இரண்டு :

பாரம்பரிய விவசாயத்தில் ஆர்வமான இளைஞர்களை தேர்ந்தெடுத்து உங்கள் மாவட்டத்தில் அதிகமாக விளையும் உணவுப் பொருட்களின் பாரம்பரிய ரக விதைகளை கண்டறிந்து அவற்றை பாதுகாக்கும் ஒரு விதைப் பாதுகாப்பு நிறுவனத்தை பள்ளிவாசல் வளாகத்தில் நவீனமாக கட்டமைக்க வேண்டும்.அந்த விதைகளை மறுஉற்பத்தி செய்து பருவ காலங்களில் மஹால்லாவை சுற்றி வாழும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் வேண்டும். இறைவனை தொழும் இடத்திலிருந்து பெறப்படும் விதைகள் வீரியமானதாக (அருள் நிறைந்ததாக) இருக்கும் என்ற உண்மையை விவசாயிகளை உணரச்செய்ய வேண்டும். நாட்டில் முஸ்லிம் சமூகத்தை தவிர மற்ற அனைத்து மதத்தினரும் இந்த வேலைகளை புண்ணியமாக கருதி செய்கின்றனர்.

ஜக்காத் நிதியின் இரண்டு பிரிவுகளில் இதற்கான பொருளாதாரத்தை திரட்டலாம் என்பதை இஸ்லாமிய வரலாறு நமக்கு கற்றுத்தருகிறது. முதலாவது, அல்லாஹ்வின் பாதையில் செலவிடப்பட வேண்டும் என்ற பிரிவில் இன்றைய காலத்தில் முதலாளித்துவம் நம் கண்முன்னால் ஏற்படுத்தும் இந்தப் பேரழிவை தடுக்க ஜக்காத்தின் ஒருபகுதியை செலவிடலாம். இரண்டாவது, உள்ளங்கள் ஈர்க்கப்பட செலவிடப்படவேண்டும் என்ற பிரிவில் இது ஒரு சிறப்பான செயல்திட்டம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சரி, ஜக்காத் பணம் இந்த வகைகளுக்கு செலவிடுதலில் பல மாறுபட்ட கருத்துக்களை வைத்து விவாதிப்பதற்கு சிலர் எப்போதும் தயார் நிலையில் இருப்பார்கள்.அப்படி ஏதேனும் நெருக்கடிஏற்பட்டால் அந்த விளையாட்டே வேண்டாம். ஜகாத் பணமே வேண்டாம் என்று கூறிவிடுங்கள்.

மகத்தான சமூக மாற்றத்தை உண்டாக்கும் இந்தப் பணிகளை நன்கொடைகள் மூலம் செயல்படுத்த வேண்டும்.மட்டுமல்ல மக்களை பயிற்றுவித்து சொத்துக்களை வக்ஃப் செய்ய சொல்ல வேண்டும். இதற்கு யாரும் ஆதாரம் கேட்கமாட்டார்கள்.காரணம் மஹல்லாக்களில் பள்ளிக்கூடங்கள் அமைத்தது குளம் குட்டை கிணறு வெட்டியது  மரம்நட்டது மயானங்கள் அமைத்தது போன்ற நிலையான நன்மைகளை அள்ளித்தரும் பணிகளுக்கு தங்களது சொந்த சொத்துக்களை எழுதி வைத்த பல சீதேவிகளின் வரலாறுகள் இதற்கு ஆதாரங்களாக உள்ளன.

நமக்குத் தெரிந்ததையும் நம்மால் முடிந்ததையும் மட்டும் செய்யும் மனோபாவம் தான் நாம் மேற்கொள்ளும் சமூகப்பணிகள் உம்மத்தின் சிக்கல்களை தீர்க்காமல் அல்லது குறைக்காமல் போனதற்கான காரணங்கள் என்பதை சமூக ஆர்வமிக்க சகோதரர்கள் சற்று நிதானமாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும். துல்லியமான இலக்கு நிர்ணயிக்கப்பட்ட சமூகப் பணிகளுக்கு மட்டுமே நிலையான மாற்றத்தை கொண்டு வரும் ஆற்றல் இருக்கிறது என்பதையும் தாங்கள் சார்ந்துள்ள அமைப்பு வட்டத்தை தாண்டி புரிந்துகொள்ள வேண்டும்.

– CMN SALEEM

Related Posts