அடர்ந்த காடு அது. அதைச் சுற்றிலும் அழகான குட்டிக் குட்டித் தீவுகள் இருந்தன. அந்தக் காட்டுக்கு ஒரு வயதான தலைவர் இருந்தார்.
அவருக்குப் பிறகு அந்த மக்களை வழி நடத்த வேறு ஒருவரை நியமிக்க முடிவு செய்தார்.
கடினமான போட்டிகளை நடத்தியே அங்கு அடுத்த தலைவனைத் தேர்ந்தெடுப்பார்கள். நான்கு நாட்கள் நடந்த போட்டிகளில், இரண்டு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
இருவருமே சிறந்தவர்கள்.
இருவரில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற பெரிய குழப்பம் வந்து விட்டது அந்தத் தலைவருக்கு.
மறுநாள் இரண்டு வீரர்களையும் அழைத்தார்,
“இளைஞர்களே! இப்போது நடக்கப் போவது இறுதிப் போட்டி. இதில் ஜெயிக்கும் ஒருவன்தான்
தலைவனாக முடி சூட்டப்படுவான்.
இப்போது உங்களுக்கு சில ஆயுதங்களும், சமையல் பாத்திரங்களும் நம்முடைய உணவு தானியமான சோளம் 1 மூட்டை கொடுக்கப்படும்.
நீங்கள் இருவரும் நம்முடைய காட்டுக்கு அருகிலிருக்கும் வெவ்வேறு தீவுகளில் படகில் கொண்டு போய் விடப்படுவீர்கள். நீங்கள் உங்களிடம் இருக்கும் தானியத்தை சமைத்து சாப்பிட்டு அது தீரும்வரை காட்டிலேயே தங்கி இருக்க வேண்டும்.
தீர்ந்த பிறகு காட்டில் இருக்கும் மஞ்சள் மரத்தின் கிளைகளை ஒடித்து அதைக் கொளுத்துங்கள்.
அதிலிருந்து வரும் புகையைக் கண்டவுடனேயே இங்கிருந்து படகை அனுப்பி உங்களை மீட்போம். உங்களில் யார், கையில் இருக்கும் தானியத்தை அதிக நாட்கள் பயன்படுத்தி அந்தத் தீவில் தாக்குப் பிடிக்கிறீர்களோ அவன்தான் அடுத்த தலைவனாகத்
தேர்ந்தெடுக்கப்படுவான்” என்றார்.
தலைவர் சொன்ன நிபந்தனைகளை 2 வீரர்களும் ஏற்று பயணமானார்கள்.
அவர்களுக்கு ஒரு மூட்டை சோளம் மூன்று மாத காலம் வரும். இறைச்சித் தேவைகளுக்கு அந்தத் தீவில் கிடைக்கும் முயல்களும், மீன்களும் போதுமானதாக இருக்கும்.
ஆனால் சோள அடையோ , சோள சோறோ சாப்பிட்டால்தான் அவர்களுக்குப் பசி அடங்கும்.
இரு இளைஞர்களும் ஆளில்லாத தீவுகளில் வசிக்க ஆரம்பித்தார்கள்.
நாட்கள் ஓடின. மூன்று மாத காலம் முடிந்தது. மக்கள் ஏதேனும் தீவிலிருந்து புகை எழும்புகிறதா என்று உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு நாள் ஒரு தீவின் கடற்கரையிலிருந்து புகை எழும்பியது. உடனே ஒரு படகு புறப்பட்டுப் போய் அங்கே எலும்பும் தோலுமாக இருந்தவனை அழைத்து வந்தது.
அவன் கரைக்கு வந்ததும் விழுந்தே விட்டான் தரையில். கொஞ்சம் நிதானமாகி, மற்றவன் இன்னும் வந்து சேரவில்லை என்பதை அறிந்து திடுக்கிட்டான்.
இருப்பினும் சுதாரித்துக் கொண்டு தலைவரிடம் சொன்னான்,
“தலைவா, எனக்குக் கொடுக்கப்பட்ட சோளம் இரண்டு மாதத்திற்கு மட்டுமே போதுமானதாக இருந்தும் நான் சாமர்த்தியமாக இத்தனை நாள் தாக்குப் பிடித்திருக்கிறேன். அவனும் என்னைப் போலத் தாக்குப் பிடித்திருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. எனவே ஓரிரு நாட்கள் பார்த்து விட்டு எனக்கே பதவியைக் கொடுக்க வேண்டுகிறேன்” என்றான்.
தலைவர் அவன் சொன்னதைக் கேட்டு தலையாட்டிக் கொண்டார்.
இன்னும் சிறிது நாட்கள் ஓடி மறைந்தன. நான்கு மாதங்கள் கழிந்து விட்டன. தலைவருக்கே சந்தேகம் வலுத்து விட்டது. தானே நேரில் சென்று பார்த்து விட முடிவு செய்தார். ஒரு படகோட்டியை அழைத்து படகை எடுக்கச் சொன்னார்.
2 மணி நேரத்தில் படகு அந்தத் தீவை அடைந்து விட்டது. அவனை உயிரோடு காணப் போகிறோமா அல்லது எலும்புக் கூடாய்ப் பார்க்கப் போகிறோமா என்ற யோசனை தலைவருக்கு! அச்சத்தில் அவருக்கு நெஞ்சு படபடத்தது.
கொஞ்ச தூரம் காட்டுக்குள் நடந்ததுமே தான் கண்ட காட்சியில் திடுக்கிட்டுப் போனார்.
அங்கே மூங்கிலாலும், ஓலைகளாலும் கட்டப்பட்ட ஒரு அழகான வீடு அவர்களை வரவேற்றது.
அதிலிருந்து அவர் தேடிய இளைஞன் ஓடி வந்தான். முன்னை விட நல்ல புஷ்டியாக மாறி இருந்தான். தலைவரை வணங்கி வரவேற்றான்.
“வாருங்கள் தலைவரே” என்று வீட்டிற்குள் அமர வைத்தான். உள்ளே போய் சூடான சோள அடையும், மீனும் கொண்டு வந்தான் சாப்பிட. அவருக்கு ஒன்றும் புரியவில்லை.
“உனக்குக் கொடுத்த சோளம் 3 மாதத்துக்குள் முடிந்திருக்குமே.?!
நீ என்னவென்றால் அருமையான
சோள அடை கொடுக்கிறாய்.?!” நீயும் நன்கு சாப்பிட்டு கொழுத்திருக்கிறாய். இது எப்படி சாத்தியம்.?!” என்றார்.
“கொஞ்சம் என்னோடு வாருங்கள் தலைவரே” என்று அவன் அவரை வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்றான்.
அங்கே அழகான சோளக் கொல்லை ஒன்று உருவாக்கப் பட்டிருந்தது.
தலைவா,நான் வந்த அன்றே ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். எனது தானியத்திலிருந்து ஒரு பங்கை எடுத்து விதைத்து வைத்து விட்டேன். இரு மாதங்களிலேயே அறுவடைக்குத் தயாராகிவிட்டது.
நான் எந்தக் கவலையுமில்லாமல் நிறைவாக சாப்பிட்டேன்.
இந்த 4 மாதங்கள் மட்டுமல்ல.
இன்னும் எத்தனை வருடம் வேண்டுமென்றாலும் என்னால் இங்கே சந்தோஷமாய் வாழ முடியும்” என்றான். தலைவர் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டார்.
பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.
“நீ தடுமாறிப் போவாய் என்று எண்ணி இந்தப் போட்டியை வைத்தேன்.
நீயோ “உன் அறிவாலும் , உழைப்பாலும் என்னைத் திணறடித்து விட்டாய்.”
நம் காட்டிற்கு ஒரு நல்ல தலைவனை காட்டிக் கொடுத்த கடவுளுக்கு மனமார்ந்த நன்றி, என்றார். நீதி: “கையில் கொடுக்கப் பட்டதை வைத்து, அதை திட்டமிட்டுப் பெருக்கிக் கொள்ளுகிறவர்களே ஜெயிக்கிறார்கள்.
அது பொருளாக இருந்தாலும், வாழ்க்கையானாலும், நேரமானாலும்.?!”
எழுத்தாளர் :- கதை சொல்லி இளங்கோ