1937 இல் முதன்முதலாக மதுரை அருகில் உள்ள வடக்கம்பட்டியில் குருசாமி என்பவரால் துவங்கப்பட்ட முனியாண்டி விலாஸ் இன்று உலகம் முழுவதும் 1500 உணவகங்களாக பெருகி உள்ளன. முனியாண்டி விலாஸ் என்ற பெயரை நாயுடு ரெட்டியார் இனத்தைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உலகம் முழுவதும் வாழும் முனியாண்டி விலாஸ் குடும்பத்தினர் ஆண்டுக்கு ஒருமுறை குலதெய்வமான வடக்கம்பட்டி முனியாண்டி கோவில் திருவிழாவை நடத்துகின்றனர்.
பத்தாயிரம் பேருக்கு பிரியாணி சமைத்து விருந்து படைக்கின்றனர்.
தங்களது இரத்த உறவுகள் தூரத்து இன உறவுகள் அனைவரும் சந்தித்து உறவுச் சங்கிலியை உயிரோட்டமாக பாதுகாக்கின்றனர். ஆண்கள் சந்தித்து அந்தந்த ஊர்களில் நாடுகளில் உணவக வணிகத்தில் உண்டாகும் சிக்கல்களை கலந்து பேசி அடுத்தகட்ட வளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்கின்றனர். முனியாண்டி கோவிலில் பலகோடி ரூபாய் வணிக முதலீடுகள் முடிவாகின்றன.
திருவிழாவில் பெண்கள் பால்குடம் முளைப்பாரி ஊர்வலம் செல்கின்றனர் அதில் திருமன வயதுடைய பெண்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்குள் சம்மந்தம் பேசி முடிவாகின்றன.
குளிரூட்டப்பட்ட பண்ணாட்டு உணவகங்கள் தமிழக தெருக்களில் நிரம்பி வரும் இன்றைய சூழலில் தமிழகத்தில் வாழும் ஒரு இனக்குழு தங்களுடைய முன்னோர்கள் அமைத்துத்தந்த உணவக வணிகத்தை விட்டுவிடாமல் நேர்மையோடு அதை மேம்படுத்துவதற்கும் அதோடு தங்களது கலாச்சாரத்தை பாதுகாத்து உறவுகளை கைதூக்கி விடுவதற்கும் இந்த முனியாண்டி கோவில் திருவிழாவை விமரிசையாக கொண்டாடுகின்றனர்.
வணிகத்தில் வீழ்ச்சியை நோக்கி செல்லும் தமிழக முஸ்லிம்களுக்கு பாடம் நடத்துகிறது இந்த முனியாண்டி விலாஸ் பழங்குடிச் சமூகம். வணிகம் என்பது தனிமனிதன் சார்ந்தது அல்ல. அது ஒரு சமூகத்தின் அடையாளம். அந்த சமூகத்தின் ஒருங்கிணைந்த செயல்பாட்டில் அதன் வெற்றி மறைந்துள்ளது என்பதை இந்த முனியாண்டி விலாஸ் சமூகம் பறை சாற்றுகிறது.
……………………………………
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செங்கடலில் அமைந்துள்ள ஜித்தா துறைமுகம் கீழ்திசை சமூகங்களின் கடல் வாணிபத்திற்கு நுழைவு வாசலாகவும் அதன் அருகில் அமைந்துள்ள மக்கா நகரம் சர்வதேச வணிக சந்தையாகவும் அமைந்திருந்தது. மேலும் அன்றைய அரேபியாவில் வாழ்ந்த அனைத்து பழங்குடிச் சமூகங்களின் குலதெய்வச் சிலைகளையும் காபா வில் வைத்து குரைஷிகள் கண்ணியத்தோடு பாதுகாத்தனர்.
இதனால் ஆண்டுக்கு ஒருமுறை காபாவில் அனைத்து பழங்குடி சமூகங்களும் குடும்பத்துடன் ஒன்றுகூடி அவரவர் குலதெய்வத்திற்கு விழா எடுத்து பலி கொடுத்து விருந்து படைத்தனர். தங்களது வேளாண்மை உற்பத்தி வணிகம் குடும்பம் குழுமோதல் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் மக்கத்து குரைஷிகளின் பஞ்சாயத்தில் தீர்த்துக் கொண்டனர்.
7ஆம் நூற்றாண்டில் நபி (ஸல்) அவர்களால் புனிதப்படுத்தப்பட்ட காபா பள்ளிவாசல் உள்ளிட்ட மக்கா நகரம் அதன்பிறகு முஸ்லிம்களின் புனித நகராகவும் சர்வதேச வணிக நகராகவும் மாறியது. கடந்த 1400 ஆண்டுகளாக உலக முஸ்லிம்கள் ஹஜ் என்ற கடமையான வணக்கத்தை நிறைவேற்றுவதற்கும் அடுத்த வணக்கமான வணிகத்தில் உலகளாவிய தொடர்புகளை பெருக்கிக் கொள்வதற்கும் மக்கா நகரை பயன்படுத்திக் கொண்டனர்.
மொழி இன வேறுபாடுகளை கடந்து உலக இஸ்லாமிய சொந்தங்கள் புனிதமிக்க மக்கத்து மண்ணில் பல வணிக ஒப்பந்தங்களை செய்து கொண்டனர். அதில் உண்மையான அக்கரையும் நேர்மையும் மிகைத்திருந்தன.
மட்டுமல்ல ஒரு முஸ்லிம் வணிகர் தனது அறிவுச் செல்வத்திற்கு ( Knowledge Wealth ) புனிதமான மக்காவில் வைத்து ஜக்காத் வழங்கினார். அதாவது வணிகத்தில் வெற்றியடைந்த மூத்த தொழிலதிபர்கள் தங்களது வெற்றியின் இரகசியங்களை உம்மத்தில் வளர்ந்து வரும் இளம் வணிகர்களுக்கு கற்றுத்தந்து படைத்தவனை மகிழ்வித்தார்கள். இதனால் உம்மதின் வணிகர்களுக்கு அல்லாஹ்வின் அருள்வளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
அரேபியாவின் அரசியல் சூழல் மாறிப்போனது. கடந்த 100 ஆண்டுகளாக முஸ்லிம் உம்மத் அற்புதமான அந்த பாரம்பரியத்தை இழந்தது. உலகின் வணிகச் சூழலும் மாறிப்போனது.
பெரு வணிகர் சிறு வணிகர் என்ற வேறுபாடின்றி தகவல்களை ஆன்மிக நிழலில் பரிமாறிக் கொள்வதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
– CMN SALEEM