மதரஸா கல்வியின் இலக்கு

by Mohamed Anas

அகில இந்திய அளவில் மதரஸாக்களின் மேம்பாட்டுப் பணியில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

” உம்மத் ” என்ற இஸ்லாமிய சமூக கட்டுமானத்தின் அடித்தளமாகவும் முஸ்லிம் அறிவுப் பாரம்பரியத்தின் சங்கிலித் தொடராகவும் திகழும் அரபு மதரஸாக்கள் தமிழகத்திலும் மீளெழுச்சி பெறவேண்டும்.

புதிய கல்வியாண்டு நெருங்கி வரும் நிலையில் அரபு மதரஸாக்களில் பள்ளிப் பாடங்களையும் இணைத்து கற்பிக்கும் திட்டத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

முஸ்லிம் உம்மத்தை மீண்டும் மதரஸாக்களின் பாரம்பரிய கல்வி முறைக்குள் கொண்டு வருவதில் தான் இந்த உம்மத்தின் கண்ணியமும் வெற்றியும் அடங்கியிருக்கிறது.

மதரஸா கல்வியின் வளர்ச்சிப் பணிகளில் இந்த கருத்தையும் ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

அரபு மதரஸாக்களில் ஆலிமியத் பட்டப் படிப்பிற்கு 7 ஆண்டுகள் என்ற காலநிர்ணயம் இருப்பது போல மாணவர் சேர்க்கையிலும் குறைந்தபட்ச பள்ளிக் கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட வேண்டும்.   

👉 8 ஆம் வகுப்பு தேர்ச்சி என்பதை மதரஸா சேர்க்கைக்கான கல்வித் தகுதியாக நிர்ணயிப்பது.

👉 பள்ளிப் பாடங்கள் இணைக்கப்பட்ட மதரஸாக்களின் கல்வி காலத்தை 7ஆண்டுகளிலிருந்து 9 ஆண்டுகளாக உயர்த்துவது.

இந்த 9 ஆண்டுகளில்…..

முதல் 7 ஆண்டுகள் அரபு மதரஸாக்களின் பாரம்பரியக் கல்வியுடன் 10,12 ஆம் வகுப்பு தேர்வெழுதி வெற்றிபெற்று ஒரு இளநிலை பட்டப் படிப்பையும் (BA – BSc) நிறைவு செய்வதற்கு தேவைப்படும்.

அடுத்த இரண்டாண்டுகளில் இஸ்லாமியப் பாடத்தில் உயர்கல்வியுடன் (ஃபாஜில்) சேர்த்து ஒரு ஆசிரியர் பயிற்சி படிப்பையும் (B.Ed) முதுநிலை படிப்பையும் (MA – MSc) சமகாலத்தில் முடிப்பார்கள்.

தமிழகத்தில் எதாவது ஒரு அரபு மதரஸாவில் இந்த கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் ஆலிம்கள் கீழ்கண்ட கல்வித் தகுதியுடன் வெளிவருவார்கள்.

ஆலிம் + M.A.,B.Ed

ஆலிம் + M.Sc.,B.Ed  

இந்த கல்வித்தகுதி மூலம் ஒரு ஆலிம் என்பதோடு சேர்த்து ஒரு மேனிலைப் பள்ளியின் முதல்வர் (Principal) பொறுப்பிற்கான முழு கல்வித்தகுதியுடன் மதரஸா பட்டதாரிகள் வெளிவருவார்கள்.

இதன் மூலம் முஸ்லிம் சமுதாயத்தில் மகத்தான மாற்றங்களை வேரிலிருந்து கொண்டுவர முடியும்.

ஆலிம்கள் இமாமாகவும் முதல்வராகவும் பணியாற்றும் கல்வித்தகுதியை பெற்றிருப்பதால் போதுமான இடவசதியும், விசாலமான பொருள்வசதியும், தொலைநோக்கு இலக்குடைய ஜமாஅத் நிர்வாகமும் அமைந்துள்ள பள்ளிவாசல்களில் அதன் வளாகத்திலியே பள்ளிக்கூடங்களை துவங்கிட முடியும்.

அந்த மஹல்லாவில் ஒவ்வொரு ஆண்டும் 3 வயது நிரம்பும் பிள்ளைகள் அடுத்த 14 ஆண்டுகளுக்கு பள்ளிவாசல் வளாகத்திலேயே பள்ளிக் கல்வியை நிறைவாக பூர்த்தி செய்யும் பெரும்பாக்கியத்தைப் பெறுவார்கள்.

அதன்மூலம் உம்மத்தின் பிள்ளைகள் இஸ்லாமிய கல்விப் பாரம்பரியத்திற்கு மீளும் வரலாற்று மாற்றங்கள் சிறிது சிறிதாக நிகழும்.

அந்த தலைமுறை உருவாகி வருகின்றன போது மஹல்லாவையும் பள்ளிவாசலையும் தங்களின் உயிராகவும் உடமையாகவும் கருதுவார்கள்.

தங்களுக்கு ஆன்மிக ஞானத்தையும் அறிவியல் கல்வியையும்  ஒருசேர கற்றுத்தந்த முதல்வர் இமாமை  தங்களின் இம்மை மறுமை வாழ்விற்கான வழிகாட்டிகளாக வாழ்நாள் முழுவதும் தூக்கிப்பிடிக்கும் (ஆலிம்கள் விரும்பும்) தலைமுறை உருவாகும்.

இந்த அனைத்து மாற்றங்களுக்கும் மூல வித்தாக திகழும் மதரஸாக்களை கண் இமைபோல பாதுகாக்கும் தலைமுறை மீண்டும் முஸ்லிம் சமுதாயத்தில் உருவாகும்.

ஏதாவது ஒரு அரபு மதரஸாவில் இதற்கான முயற்சிகள் சிறிய அளவில் துவங்கினால் போதும். அதுவே முஸ்லிம்களின் பொற்காலத்தை நோக்கிய நீண்டதூரப் பயணத்தில் நாம் எடுத்துவைக்கும் முதல் அடியாக இருக்கும்.

இப்படித்தான் சமூக மாற்றங்கள் உலகில் நடந்துள்ளன.

– CMN SALEEM

Related Posts