முஹம்மது யூனுஸ் – அசாத்தியங்களை சாத்தியப்படுத்தும் சாதனையாளன்

by Mohamed Anas

வறுமை இல்லாத உலகை ஏழைகளே உருவாக்க முடியும். நாம் செய்ய வேண்டியதெல்லாம், நாம் அவர்களைச் சற்றி கட்டிய சங்கிலிகளிலிருந்து அவர்களை விடுவிப்பதே.
– முஹம்மது யூனுஸ், நோபல் விருது பெற்றவர்

ஜூன் 28, 1940 இல் பங்களாதேஷின் டாக்காவில் பிறந்தார் முஹம்மது யூனுஸ். சிறுவயது முதல் சமூகத்தின் மீது அவர் கொண்ட காதல், டாக்கா பல்கலைக்கழகத்தில் இணைந்து பொருளாதாரத்துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெறச்செய்தது. அதன்பிறகு, சிட்டகாங் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறையின் பேராசிரியராக பணியாற்றினார்.

1970-களின் முற்பகுதியில், உதவித்தொகையுடன் அமெரிக்காவிலுள்ள வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறையில் முனைவர் பட்டம் பெற்றார் யூனுஸ். தனது படிப்பைத் தொடர்ந்து மீண்டும் பங்களாதேஷுக்குத் திரும்பிவந்த அவர் சிட்டகாங் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறைத் தலைவரானார்.

பங்களாதேஷ் தனிநாடாக சுதந்திரம் பெற்றபிறகு 1974-யில் ஏற்பட்ட கொடூர பஞ்சம் சுமார்  பதினைந்து லட்சம் மக்களின் உயிரைப் பறித்த அந்த நிகழ்வு பங்களாதேஷ் மக்களின் வாழ்வில் நீக்க முடியாத வடுவாக உள்ளது. காலங்கள் உருண்டோடினாலும் காட்சிகள் மாறவில்லை.-

வகுப்பறையில் அவர் கற்பித்த பொருளாதாரக் கோட்பாடுகள் அவரைச் சுற்றியுள்ள ஏழை மக்களின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாததால் விரக்தியடைந்தார். பாடப்புத்தகங்களிலிருந்து விலகி யதார்த்தத்தில் ஏழைகளின் பொருளாதார நிலை எப்படி இருக்கிறது என கண்டறிய முடிவு செய்தார்.
1976 ஆம் ஆண்டில், சிட்டகாங் பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள ஜோப்ரா கிராமத்தில் மிகவும் ஏழ்மையானவர்களின் வீடுகளுக்குச் சென்று அங்குள்ள எளிய மக்களுடன் உரையாடினார்.

தொடர்ச்சியான உரையாடல்களின் மூலம் மிகச் சிறிய கடன்கள் ஏழை மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்பதைக் உணர்ந்தார்.

ஆனால் ஜோப்ரா கிராமப் பெண்கள் சுய தொழிலான மூங்கில் தளவாடங்கள் தயாரிக்க அதிக வட்டிக்கு கடன்களை வாங்க வேண்டியிருந்தது, மேலும் தங்கள் லாபத்தை பணக்காரர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டியுமிருந்தது.

வங்கிகள் ஏழைகளுக்கு கடன் கொடுக்க மறுக்கும் சூழல், வறிய மக்களிடம் வாங்கப்படும் அதிக வட்டி, லாபத்தையும் இழந்து செய்யப்படும் தொழில் ஆகியவைகளால் வருத்தப்பட்ட யூனுஸ், கிராமத்தில் உள்ள 42 பேருக்கு தனது சொந்த பணத்திலிருந்து $27 டாலர் கடன் கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து ஏழைகளுக்கு கடன் வழங்க பாரம்பரிய வங்கிகளை அணுகினார் யூனுஸ். காலம் காலமாக பணம் படைத்தவனுக்கே கடன் கொடுத்து பழகிய அவைகள், ​​வறிய மக்கள் கடனை திருப்பிச் செலுத்துவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்று சப்பைக்கட்டு கட்டினார்கள். ஏழைகள் எளிதில் கடன் பெறமுடியாதவாறு வங்கிகளின் விதிமுறைகளையும் உருவாக்கியும் வைத்திருந்தனர்.

தொடர் முயற்சிகளுக்குப் பிறகு, ஜோப்ராவில் உள்ள ஏழைகளுக்கு கடன் வழங்க தன்னை வங்கியிடம் பொறுப்பாளராக்கி (Security) 1976 ஜனவரியில் ஜனதா வங்கியிடமிருந்து கடன் பெறுவதில் வெற்றிபெற்றார். ஆனாலும் ஒவ்வொருமுறை வங்கியிடமிருந்து கடன் வாங்குவதில் நச்சரிப்புகள் தொடர்ந்தது.

பல நெருக்கடிகளுக்கு மத்தியில் அக்டோபர் 2, 1983 அன்று, ஏழைகளுக்கு சிறு கடன்களை வழங்கும் தன்னுடைய கனவு திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுத்து கிராமீன் வங்கி (கிராம வங்கி) என்ற புதிய வடிவிலான வங்கியை உருவாக்கினார்.

கிராமீன் வங்கியை முழு வீச்சில் ஏழை மக்களிடம் கொண்டு சேர்த்தார் யூனுஸ். பாரம்பரிய வங்கிகள் போல் அல்லாமல் கிராமீன் வங்கி ஏழைகளின் வீட்டிற்கே சென்று கடன் வழங்குவது, தொழில் தொடங்க ஆர்வப்படுத்துவது, வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது என்று மக்களின் நலனுக்காகவே உருவாக்கப்பட்டது. உலகில் உள்ள வங்கிகள் எல்லாம் பெண்களை புறக்கணித்து ஆண்களுக்கு மட்டுமே கடன் வழங்கி வந்தமுறையை உடைத்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது கிராமீன் வங்கி.

விளைவு மே 2008 நிலவரப்படி, கிராமீன் வங்கியில் எழுபத்தைந்து லட்சம் மக்கள் கடன் வாங்கியுள்ளனர், அவர்களில் 97% விழுக்காடு பெண்கள். இரண்டாயிரத்தி ஐநூறு கிளைகளுடன், கிராமீன் வங்கி எண்பதிரெண்டாயிரம் கிராமங்களில் சேவைகளை வழங்குகிறது, இது பங்களாதேஷில் 97% விழுக்காடுக்கு மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கியது. இதுவரை ஏழை மக்களுக்கு சுமார் எழுபது லட்சம் டாலருக்கும் மேல் கடன் கொடுத்துள்ளது. அதில் 99.6% விழுக்காடு மக்கள் கடனை திரும்பிச் செலுத்தியும் உள்ளார்கள். (பாரம்பரிய வங்கிகளை காட்டிலும் கடனை திருப்பிச்செலுத்தும் விகிதம் அதிகம் )

கிராமீன் அறக்கட்டளையை நிறுவி கிராமீன் சிறுகடன் முறையை உலகம்முழுவதும் விரிவுபடுத்தினார். பணக்கார நாடான அமெரிக்காவில் கூட ‘கிராமீன் அமெரிக்கா’ என்று பதினைந்து நகரங்களில் இருபத்திமூன்று கிளைகளை பரப்பி சுமார் ஒரு லட்சத்தி முப்பத்திரெண்டாயிரம் பெண்களுக்கும் அதிகமாக 165 கோடி டாலர் கடன் கொடுக்கப்பட்டுள்ளது.
“அக்டோபர் 2006 இல், பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியை உருவாக்கும் முயற்சிகளுக்காக முஹம்மது யூனுஸுக்கும் அவரின் கிராமீன் வங்கிக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.”

பங்களாதேஷில் 95 லட்சம் இளைஞர்கள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், அவர்களில் 56% பேர் எடை குறைபாடுள்ளவர்கள். தினம்தோறும் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் மாலைக்கண் நோய், இரத்தக் கொதிப்பு, மாரடைப்பு, நீரழிவு நோய், புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் இளம்பிஞ்சுகளின் உயிரை குடித்துக்கொண்டு இருந்தது.

முஹம்மது யூனுஸ் ஒவ்வொரு முறையும் மக்களுக்கு ஏற்படும் சிக்கல்களை பார்க்கும்போது அதிலிருந்து மக்கள் மீண்டு வர வணிகத்தை உருவாக்கினார். அதற்கு சமூக வணிகம் என்று பெயர் சூட்டினார். சமூக வணிகம் என்பது சமூக வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட ஒரு நிறுவனம்.

சில சிறிய வேறுபாடுகளைத் தவிர சாதாரண வணிகங்கள் போலவே சமூக வணிகங்கள் செயல்படுகின்றன. நிதி ரீதியாக சுயமாக நிலைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள சமூக வணிகம், ஒரு நன்கொடை நிறுவனம் போலல்லாமல், லாபத்தை உருவாக்குகின்றன.

முதலீட்டார்கள் சிறிது காலத்திற்குப் பிறகு முதலீட்டை மட்டும் எடுத்துவிட்டு லாபத்தை வணிகத்தின் மேம்பாட்டுக்கு விட்டுவிட வேண்டும் என்பது தான் சமூகவணிகத்தின் முதல் விதி.

அதனடிப்படையில், பங்களாதேஷில் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் மரணத்தை தவிர்க்க பிரெஞ்சு நாட்டின் டனோன் உணவு நிறுவனத்துடன் சேர்ந்து, கூட்டு முதலீட்டில் யோகர்ட் – Yogurt (தயிர் போன்ற உணவு) தயாரிக்க ‘கிராமீன் டனோன் உணவு நிறுவனத்தை (Grameen Danone Foods Ltd.)’ ஆரம்பித்தனர்.

டனோன் நிறுவனத்துடன் யூனுஸ் நடத்திய பேச்சுவார்த்தை இன்னும் தெளிவாக சமூகவணிகத்தை புரிந்துகொள்ள உதவும். டனோன் நிறுவனத்தார் முதலில் யோகர்ட் தயாரித்து  ஒரு நெகிழி (பிளாஸ்டிக்) கோப்பையில் வைத்து காட்டினர். யூனுஸ் சொன்னார், “சமூக வணிகத்தில் நெகிழி (பிளாஸ்டிக்) அனுமதி இல்லை. மக்கும் பொருளை நாங்கள் விரும்புகிறோம் என்றார்.”
“நாங்கள் உலகம் முழுவதும் நெகிழியை பயன்படுத்துகிறோம்” என்று டனோன் நிறுவனத் தோழர்கள் கூற , “உலகம் முழுவதும் லாபம் ஈட்டுவதற்கு வணிகம் செய்கிறீர்கள். இங்கே நீங்கள் ஒரு சமூக வணிகர் என்று யூனுஸ் சொன்னார்.
அவர்களுக்கு அது வருத்தத்தை ஏற்படுத்தினாலும் தீர்வைத் தேட ஆரம்பித்தனர். நான்கு மாதங்களுக்குப் பிறகு, சோளமாவை (CornStarch) கொண்டு செய்யப்பட்ட புதிய கோப்பையை  அவர்கள் உருவாக்கிக் கொண்டு வந்தார்கள். “நான் அதை சாப்பிடலாமா?” என்று கேட்டார் யூனுஸ். “ஏனென்றால், ஏழை மக்கள் சாப்பிட்டுவிட்டு தூக்கியெறியக்கூடிய கோப்பையை ஏன் பணம் செலவு செய்து  வாங்கவேண்டும்? சாப்பிடக்கூடிய ஊட்டச்சத்து நிறைந்த கோப்பையை நீங்கள் உருவாக்குங்கள். மீண்டும் டனோன் நிறுவனம் உண்ணக்கூடிய கோப்பையை தயாரிக்க மிகவும் கடினமாக உழைத்து இறுதியில் அதை உருவாக்கவும் செய்தார்கள்.

பெரிய நிறுவனங்களுக்கு மகத்தான படைப்பாற்றல் உள்ளது. ஆனால் அதை நீங்கள் கேட்கவேண்டும்.

ஒரேயொரு கிராமீன் டனோன் உணவு நிறுவனம் பங்களாதேஷில் மூன்று லட்சம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தியிருக்கிறது. ஐநூறு விவசாயிகள், இருநூறு “கிராமீன் பெண்கள்” மற்றும் நூற்றிருபது வண்டி இழுப்பவர்களுக்கு நிலையான வருவாயை உருவாக்கி, தயாரிப்புகளை விநியோகிக்கிறது.

இதுபோன்று பேராசிரியர் யூனுஸ் பங்களாதேஷில் வறுமை மற்றும் வளர்ச்சியின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண

கிராமீன் தொலைபேசி (மொபைல் தொலைபேசி நிறுவனம்),

கிராமீன் சக்தி (சூரிய எரிசக்தி நிறுவனம்),

 கிராமீன் நிதி (சமூக முதலீட்டு நிறுவனம்- Social Venture Capital Company ),

கிராமீன் ஜவுளி,

கிராமீன் பின்னலாடை ,

கிராமீன் கல்வி,

கிராமீன் வேளாண்மை,

கிராமீன் மீன்பிடிப்பு மற்றும் கால்நடைகள்,

கிராமீன் வணிக மேம்பாடு, மற்றும் கிராமீன் ஹெல்த்கேர் சர்வீசஸ் போன்ற நிறுவனங்களை நிறுவியுள்ளார்.

மனிதனின் படைப்பாற்றலை ஒரு புறமும் உலகிலுள்ள அனைத்து மக்களும் சந்திக்கும் பிரச்சனைகளை மறுபுறமும் வைத்து, அவற்றை ஒன்றோடு ஒன்று மோதவிட்டால் மனிதனின் படைப்பாற்றலே வெல்லும். இன்று சமூகத்தில் நிகழும் இவ்வளவு சிக்கல்களுக்கு காரணம், பிரச்சனைகளை தீர்க்கும் நிறுவனங்களைக் காட்டிலும் லாபத்தை மையப்படுத்திய நிறுவனங்களையே அதிகம் உருவாக்கியுள்ளதுதான்.

இன்றுள்ள  பல விஞ்ஞான கண்டுபிடிப்புகள் சில காலம் முன்புவரை கற்பனைக் கனவுகள் (science Fiction). அந்த கற்பனை கனவுகள் தான் படிப்படியாக வளர்ச்சியடைந்து புதிய கண்டுபிடிப்புகளை இந்த உலகத்துக்கு கொடுத்தது.
நாமும் கற்பனை செய்வோம், சமூக கற்பனை( Social Fiction) வறுமை, வேலைவாய்ப்பின்மை, கார்பன் உமிழ்வு (carbon emisson) இல்லாத ஒரு உலகத்தை உருவாக்குவோம் என்று.

வருங்காலத்தில் மக்கள் அருங்காட்சியத்திற்கு சென்று வறுமை பற்றியும் வேலைவாய்ப்பின்மை பற்றியும் அறிந்து கொள்ளட்டுமே.மனித சமுதாயத்தில் வறுமை ஏன் நீண்ட காலம் நீடித்தது என்று அவர்கள் ஆச்சரியப்படுவார்கள் – கோடிக்கணக்கான மக்கள் துன்பம், பற்றாக்குறை மற்றும் விரக்தியில் வசிக்கும் போது ஒரு சிலர் எப்படி ஆடம்பரமாக வாழ முடியும்.
“வறுமை ஏழை மக்களால் உருவாக்கப்படவில்லை. நாம் நமக்காக வடிவமைத்துக் கொண்ட தவறான பொருளாதார கொள்கைகள், அதை நடைமுறைபடுத்தும் வழிமுறைகளால்  தான் வறுமை உருவாக்கப்படுகிறது”.

வறுமை இல்லாத உலகை ஏழைகளே உருவாக்க முடியும். நாம் செய்ய வேண்டியதெல்லாம், நாம் அவர்களைச் சுற்றிகட்டிய சங்கிலிகளிலிருந்து அவர்களை விடுவிப்பதே.

எழுத்தாளர் – அ. இஜாஸ் முஸம்மில் M.Com

மின்னஞ்சல் – ijasmuzammil45@gmail.com

Related Posts