தமிழக முஸ்லிம் மஹல்லாக்களில் போதை பொருட்கள் சரளமாக புழங்குகிறது.எல்லோருக்கும் இந்த கவலையும் அச்சமும் அதிகரித்து வருகிறது.
கஞ்சாவின் பாதிப்புகளுக்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல மதுவின் பாதிப்புகள்.மதுவிற்கு அடிமையானவர்கள் தான் அதிகம்.சமீபகாலமாக ஆண் பெண் வயது வேறுபாடில்லாமல் ஆந்த்ராய்டு போன் அடிமைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த அனைத்து வகை போதைகளுக்கும் அடிமையாகி கல்வி மற்றும் தொழிலை இழந்தவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள்,சீரழிந்துபோன குடும்பங்கள், விதவையாகிப் போன பெண்கள், ஆதரவற்றுப் போன குழந்தைகள் என்று இந்த சமூக அவலங்களை மஹல்லா வாரியாக கணக்கெடுத்துப் பார்த்தால் சமுதாயப் பணியின் பொறுப்புகளில் இருப்பவர்கள், சமுதாயத்திற்கு உரை நிகழ்த்தும் இடத்தில் இருப்பவர்கள் குற்ற உணர்ச்சிகளுடன் தலைகுனிந்து நிற்கும் நிலை ஏற்படும்.
ஆண்டுக்கு ஆண்டு இந்த சீரழிவுகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இந்த பேராபத்திலிருந்து உம்மத்தை பாதுகாக்கும் நிலையான நீண்டகால திட்டங்கள் மஹல்லா அளவில் அவசரகால அடிப்படையில் ஆலோசிக்கப்பட வேண்டும்.
13 வயது முதல் 20 வயதுடைய முஸ்லிம் இளைஞர்களின் தினசரி வாழ்வு குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டிய கடமை மஹல்லா ஜமாஅத் நிர்வாகத்திற்கு இருக்கிறது.
இந்த இளைஞர்கள் தான் அந்த ஜமாஅத்தின் நாளையத் தலைவர்கள். அடுத்தடுத்த காலங்களில் மஹல்லாவின் நன்மைக்கும் தீமைக்கும் இந்த இளைஞர்களே இந்த இளம்பெண்களே காரணமாக இருப்பார்கள்.
ஜமாஅத் நிர்வாகம் தனது அதிகமான நேரத்தையும் சிரமப்பட்டு சேகரிக்கும் பொருளாதாரங்களையும் இந்த வயதுடைய இளைஞர்கள், இளம் பெண்களின் நல வாழ்விற்காக செலவிட வேண்டும். இது ஜமாஅத் நிர்வாகத்தின் அமானித பொறுப்பு.
வெளிநாடு சம்பாத்தியத்தில் இருக்கும் ஆண்கள் அதிகமுள்ள மஹல்லாக்களில் வளரும் ஆண்பிள்ளைகள் தாயின் பராமரிப்பில் இருப்பதால் கண்காணிப்பும் கண்டிப்பும் வழிகாட்டுதலும் குறைவாக இருக்கும்.இந்த மஹல்லாக்களில் ஜமாஅத் நிர்வாகத்தின் பொறுப்புகள் அதிகமாக மாறுகிறது.
முன்னெடுக்க வேண்டிய பணிகள் :
– போதைப் பொருட்கள் புழங்கும் ஆபத்துக்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பள்ளிவாசல்களில் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
– பிள்ளைகளின் நட்பு வட்டங்கள் குறித்து பெற்றோர்கள் எச்சரிக்கையோடு கண்காணிக்க வேண்டும்.
– இயல்பாகவே பருவவயது இளைஞர்கள் ஆக்ரோஷமான விளையாட்டுக்களில் ஈடுபாடும் வீரதீரத் செயல்களில் துடிப்பும் நிறைந்தவர்களாக இருப்பார்கள். (இன்றைய நகரத்து பிராய்லர் இளைஞர்கள் தவிர்த்து).
பருவ வயதில் முறுக்கேறும் அவர்களின் உடற்கட்டை தினமும் அலுப்படையச் செய்யும் விளையாடுப் பயிற்சிகளில் ஈடுபடுத்த வேண்டும்.கிராம நகர அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மஹல்லாக்களில் இடைவெளி இல்லாமல் நடைபெற வேண்டும். அதற்கான கட்டமைப்பை ஜமாஅத் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். மஹல்லாவில் இதை ஒரு திருவிழா போல சந்தைப்படுத்தி கொண்டாட வேண்டும்.
இது இளைஞர்களை சீரழிவு சிந்தனைகளிலிருந்தும் தவறான பழக்க வழக்கங்களிலிருந்தும் ஓரளவிற்கு திசை திருப்பும்.
ஒரு பருவ வயது இளைஞனால் ஒரு இடத்தில் சிறிது நேரம் சும்மா இருக்க இயலாது.அவனுக்கு ஏதாவது துறுதுறுவென்று செய்து கொண்டிருக்க வேண்டும்.இது அவனது வயதின் இயல்பு.செய்வதற்கு ஒன்றுமே இல்லையென்றால் வீட்டிலுள்ள பைக்கை எடுத்துக்கொண்டு அதிவேகமாக ஓட்டிச்செல்ல முற்படுவான். அதனால் தான் அதிகமான விபத்துகளும் மரணங்களும் ஏற்படுகின்றன.இந்த எதார்த்தத்தை மூத்தவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இளைஞர்களை மஹல்லா ஜமாஅத் நிர்வாகம் அரவணைத்து அவர்களது வயதின் இயல்புக்கேற்ற சமூகப் பொறுப்புகளை வழங்காததால் தான் அவர்கள் மாநில அளவில் மையப்படுத்தப்பட்ட சமுதாய இயக்கங்களை நோக்கி நகர்ந்து சென்றார்கள் என்ற உண்மையை இனியாவது சமுதாயத்தின் முன்னோடிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
– பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் சமூக வலைத்தளங்களை விட்டு விலகி வந்து மஹல்லாவில் தங்களை பின்தொடர்ந்து வளரும் இளைஞர்களின் வாழ்வில் சற்று கவனம் செலுத்த வேண்டும். அவர்களுடன் நட்பு முறையில் அமர்ந்து கல்வி மற்றும் ஆன்மிக கலந்துரையாடல்களை (விவாதங்கள் அல்ல) மாதம் இருமுறையாவது நடத்த வேண்டும். கல்வியின் மீதும் ஆராய்ச்சிகளின் மீதும் ஆர்வத்தை ஏற்படுத்தி தன்னம்பிக்கையை வளர்த்தெடுக்க வேண்டும்.
– திருக்குர்ஆன் மாநாடுகள் மீண்டும் தமிழகமெங்கும் கலாச்சார விழாவாக எழுச்சிபெற வேண்டும். அதோடு சேர்த்து இஸ்லாமிய குடும்பவியல் மாநாடு,கல்வி மாநாடு,அறிவியல் ஆராய்ச்சி கருத்தரங்கம், கதை சொல்லுதல் கவிதை வாசித்தல் பேச்சுப்போட்டி எழுத்துப்போட்டி போன்ற இலக்கிய விழாக்கள், வேலைவாய்ப்புகள் மற்றும் புதிய தொழில் வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் என்று இன்றைய இளைஞர்களை ஈர்த்து அவர்களை பள்ளிவாசலுடன் கட்டிப்போட வேண்டும். அவர்களின் சிந்தனைகளை ஆக்கபூர்வமான திசைகளில் திருப்பும் நடவடிக்கைகளை ஜமாஅத் நிர்வாகம் தான் செய்ய வேண்டும்.
மஹல்லாவில் வளரும் பிள்ளைகளின் வளர்ச்சியில் அறிவையும் நேரத்தையும் பொருளாதாரத்தையும் செலவிடாமல் விட்டுவிட்டால்…. அவர்களின் கவலைகளுக்கும் தேடல்களுக்கும் தீர்வளிக்காமல் விட்டுவிட்டால் பிறகு அவர்கள் எடுக்கும் முடிவுகளில் அவர்களது வாழ்க்கைப் போக்கில் தலையிடும் உரிமை மூத்தவர்களுக்கும் சமுதாய முன்னோடிகளுக்கும் இல்லாமல் போய்விடும்.
– CMN சலீம்