மகாசித் ஆய்வுமுறைமை (பகுதி 01)

by Mohamed Anas

ஜாஸிர் அவ்தா மகாசித் சிந்தனையை வலியுறுத்திப் பேசும் நவீன கால முஸ்லிம் அறிஞர்களுள் முக்கியமானவர். மகாசிதுஷ் ஷரீஆ பற்றிய அவரது புத்தகங்களுக்கு தனியான இடம் உள்ளது. எனினும், ஏற்கனவே எழுதிய புத்தகங்களை விட இன்று அறிமுகப்படுத்த முனையும் புத்தகம் இன்னும் விரிவான தளம் ஒன்றை நோக்கி நகர்ந்திருக்கிறது. சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால், ஏற்கனவே எழுதப்பட்ட புத்தகங்கள் மிகப்பெரும்பாலும் இஸ்லாத்தின் கிளையம்சங்களை மகாசிதோடு தொடர்புபடுத்துவதாக உள்ளன. மாற்றமாக, இப்புத்தகம் மகாசிதை “முஸ்லிம் சமூகத்தின் முழுமையானதொரு உள்ளக‌ சீர்திருத்தம்” ஒன்றுக்கான‌ அடித்தளமாக அறிமுகப்படுத்துகிறது. அதேநேரம், குறிப்பிட்ட சீர்திருத்தம் ஒட்டுமொத்த மனித சமூகத்துக்குமான சீர்திருத்தமாகவும் பங்களிப்பாகவும் அமையும் என்பதும் அவரது நம்பிக்கை.

பேராசிரியர் ஜாசிர் அவ்தாவுடைய “Re-envisioning Islamic Scholarship- Maqasid methodology as a new approach” எனும் புத்தகம் (அரபு மொழியில் இதன் தலைப்பு المنهجية المقاصدية نحو إعادة صياغة معاصرة للإجتهاد الإسلامي என்றமைகிறது) முன்னுரையுடன் ஆரம்பித்து, அறிமுகக் குறிப்பு, நவீன இஜ்திஹாத் முறைமைகளது சிக்கல்கள், மகாசித் ஆய்வுமுறைமைக்கான அடிப்படைகள், இஜ்திஹாதுக்குரிய ஐந்து எட்டுக்கள், கோட்பாட்டுருவாக்கத்துக்கான ஏழு அம்சங்கள், அவற்றைக் காணும் முறைமைகள், இஸ்லாமிய கற்கைகளுக்கான பரிந்துரைக்கப்படும் ஒழுங்கு ஆகிய ஆறு பிரதான தலைப்புக்களை உள்ளடக்கியிருக்கிறது.

புத்தகத்தின் கருத்துக்களை இக்கட்டுரை சுருக்கித் தருகிறது. நவீன இஸ்லாமிய சிந்தனையில், மகாசித் சிந்தனையில், சமூக சீர்திருத்த முறைமையில் புதிய ஒளியை பாய்ச்சும் இப்புத்தகம் மிக விரிந்த தளத்தில் வாசிக்கப்பட வேண்டும், கலந்துரையாடப்பட வேண்டும் என்பதே எமது அவா.

முன்னுரை:

இஸ்லாமிய வரலாறு ஏற்ற, இறக்கம் கொண்டது, காலத்துக்குக் காலம் அறிஞர்கள் தோன்றி சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர் என்ற வரலாற்று உண்மையை ஆழமாக புரிந்துகொள்வது அவசியம். “சத்தியம், அசத்தியம் ஒன்றோடொன்று முரன்பட்டுக்கொள்ளல்” எனும் இறைநியதி வரலாறு முழுக்க தொழிற்பட்டே வந்திருக்கிறது. பரம்பரை ஆட்சி முறைமை, அடக்குமுறை ஆட்சிமுறைமை, ஆட்சியாளர்களுக்கு பக்கபலமாக இருக்கும் சட்டத்துறை அறிஞர்கள் போன்ற சறுக்கல்கள் வந்த போது உமர் இப்னு அப்துல் அஸீஸ் போன்றவர்கள் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டனர். பிற்பட்ட காலத்தில் பைதுல் ஹிக்மா மொழிபெயர்ப்பு பணியினூடாக நல்ல பல ஆரோக்கியமான முன்னெடுப்புக்கள் நடந்தது போல, அதனூடாக இஸ்லாமிய சிந்தனைக்கு முரண்பட்ட வெளி சிந்தனைகளும் ஊடுருவத் தொடங்கின. எனினும், அக்கால முஸ்லிம் அறிஞர்கள் தத்துவ ரீதியாக சவால்களை எதிர்கொண்டு வஹியின் ஒளியில் சிந்தனைகளை அணுகும் ஆய்வு முறைமையை கட்டமைத்தனர்.

இவ்வரலாற்றுத் தொடர்ச்சியில் இன்றைய உலகை புரிந்துகொள்வது அவசியம். இன்றைய தேசிய அரசு முறைமைக்குள் இஸ்லாமிய சிந்தனை பல வகையான சிக்கல்களை எதிர்கொள்கிறது. உதாரணமாக, இஸ்லாமிய சட்டத்துறை அரசமயமாக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிடலாம். நவீனத்துவத்துக்கு முன்னரான காலப்பகுதியில் இஸ்லாமிய சட்டப்பகுதி சுயாதீனமான நிறுவன ஒழுங்கில், அரச தலையீடு இல்லாத ஒன்றாக இயங்கி வந்திருக்கிறது. ஸகாத், வக்ப் போன்றன சுயாதீனமாக இயங்குவதற்குத் துணை புரிந்தன. ஆனால், இன்று பத்வா, வக்ப், ஸகாத், கற்பித்தல் நிலையங்கள் என அனைத்துமாக அரச கட்டுப்பாட்டின் கீழ் ஒரு சிலரது நலனை மையமாக வைத்து இயக்கப்படுவது மிக முக்கியதொரு சவாலாக உள்ளது.

இவ்வாறான பல சவால்களை இன்று முஸ்லிம் சமூகம் எதிர்கொள்கிறது. அவற்றுக்கான தீர்வு தேடும் முயற்சிகளும் நடந்தவாறே உள்ளன. எனினும், போதியதாக இல்லை. புதியதொரு சீர்திருத்த முறைமை தேவைப்படுகிறது. இஸ்லாம் பற்றிய முழுமையானதொரு பார்வையோடு அது வீரியம் கொண்டு எழ வேண்டியுள்ளது. அதன் ஆரம்ப எட்டையே இப்புத்தகம் எடுத்து வைக்கிறது என நம்பலாம்.

பகுதி 01: அறிமுகக் குறிப்பு

கருத்துக்கள், உலகப் படைப்புகள் மற்றும் உலக நிகழ்வுகள் “ஒன்றோடொன்று இறுகப் பிணைந்திருக்கின்றன” மற்றும் “இலக்கு மையப்பட்டிருக்கின்றன” என்ற இரு அடிப்படை உண்மைகளை அல்குர்ஆன் மிக விரிவாக விளக்குகிறது என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக இப்பகுதி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

அல்குர்ஆனை சிலர் துண்டுதுண்டாகப் புரிந்துகொள்கின்றனர், ஒன்றோடொன்றை இணைத்துப்பார்க்காமல். ஒரு சூரா இன்னொரு சூராவுடன் தொடர்புபடுகிறது. ஓர் ஆயத் இன்னோர் ஆயத்துடன் தொடர்புபடுகிறது. கிளைப்பகுதிகள் தலையாய பகுதிகளோடு இணைகிறது. இவ்வகையாக ஒன்றை இன்னொன்றோடு இணைத்துப் பார்த்தல் அவசியமானது. தேனி பற்றிய வசனம் தேனியை வர்ணிப்பதுடன் நின்று விடுவதில்லை. அது விரிந்ததொரு தளம் நோக்கி எம்மை திசைவழிப்படுத்துகிறது. அதன் படைப்பாளன் பற்றி ஞாபகப்படுத்துகிறது. அது வாழும் சூழல் பற்றியும் அதன் மூலம் பயனடையும் மனிதர்கள் பற்றியும் கூறுகிறது. தேனி பற்றிய ஒட்டுமொத்தப்பார்வை “சூழல் கட்டமைப்பு” ஒன்றை விளக்குகிறது.

கிளைத் தலைப்புக்களை ஒன்றோடொன்று இணைத்துப் பார்க்கும் போது “தலையாய கருத்தாக்கங்கள்” பிறக்கின்றன (Emergence of wholism). இங்கு கிளைத்தலைப்புக்களை ஆய்வுக்குட்படுத்தி அவற்றுக்கிடையில் பிணைப்பு உருவாக்கப்படும்போது அவை ஒவ்வொன்றும் அடைய முனையும் இலக்குகளை கருத்திற் கொள்வது அவசியம். ஏனெனில், அல்குர்ஆன், அதன் போதனைகள் இலக்குமையப்பட்டவையாகவே உள்ளன. தொழுகையை எடுத்துக் கொள்வோம். “சலாத்” (தொழுகைக்கு அல்குர்ஆன் பயன்படுத்தும் சொல்) என்பது “சிலத்” (சிலத் என்பது இறுக்கமான தொடர்பு, பிணைப்பை குறிக்கிறது) என்ற பதத்திலிருந்து பிறக்கிறது. தொழுகை இறைவனுக்கும் மனிதனுக்குமிடையில் ஒரு பிணைப்பை உருவாக்குவதை இலக்காக கொள்கிறது, மனிதனுக்கும் மஸ்ஜிதுக்குமிடையில் ஓர் இணைப்பை ஏற்படுத்த முனைகிறது, அடுத்த மனிதர்களோடு தொடர்புபட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது, மலக்குமார்கள் ஏனைய படைப்பினங்களோடு தொடர்புபடுவதை நோக்காகக் கொள்கிறது… என பல பரிமாணங்களை தொழுகை இலக்காகக் கொள்கிறது. தொழுகை மனிதனது அறிவையும், உணர்வையும் அடிக்கடி தட்டிவிடுகிறது, அவனது நடத்தை சீராகுவதை யாசிக்கிறது போன்றன தொழுகையின் இன்னும் சில எதிர்பார்ப்புக்கள்.

மேற்கூறிய வகையில், அல்குர்ஆனின் ஒவ்வொரு கருத்தையும் இன்னொன்றோடு இணைத்துப் பார்த்து, ஒவ்வொன்றும் அடைய விரும்பும் இலக்குகளை கருத்திற்கொள்ளும் போது “தலையாய கருத்தாக்கங்கள்” பிறக்கின்றன. அவற்றை நாம் ஏழு என அடையாளப்படுத்துகிறோம்: இலக்குகள் (Objectives), புரிதல்கள் (Concepts), குழுக்கள் (Groups), பிரபஞ்ச விதிகள் (Universal laws), பெறுமானங்கள் (Values), ஆதாரங்கள் (Proofs), ஏவல்கள் (Commands). இவ்வகையான தலையாய கருத்தாக்கங்கள் புதியதொரு உலகப் பார்வை (Worldview) தோற்றம்பெறுவதற்கு வழிவகுக்கின்றன.

அல்குர்ஆனை ஒன்றோடொன்று இறுகப் பிணைந்ததாகவும் இலக்கு மையப்பட்டதாகவும் வாசிக்கும் அணுகுமுறை அனைத்தையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த பார்வையாகவும், எதிர்காலத்தை கருத்திற்கொண்ட திட்டமிடலாகவும், பலபோது முஸ்லிம் சிந்தனையை குறிப்பாகவும், அடுத்த சிந்தனைகளை பொதுவாகவும் விமர்சிக்கும் அணுகுமுறையாகவும் அமைகிறது. இதனை நாம் அடுத்துவரும் தலைப்புக்களில் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

பகுதி 02: நவீன கால இஜ்திஹாத் முறைமைகளில் உள்ள சிக்கல்கள்

முஸ்லிம் அறிஞர்களது நவீன கால இஜ்திஹாத்கள் பின்வரும் நான்கு வகையான சிக்கல்களுக்குள் அள்ளுண்டு செல்வதை அவதானிக்கலாம்:

01- வஹியின் பக்கம் மீளாமல் முதுசங்களை கண்மூடி பின்பற்றல்: முதுசங்களுக்கு புனிதத்துவத்தை வழங்கும் அளவுக்கு கண்மூடி பின்பற்றல் வளர்ந்திருக்கிறது. இங்கு வஹி முழுமையாக புறக்கணிக்கப்படுகிறது. நாம் முதுசங்களில் இருந்து பயனடைவதை மறுக்கவில்லை. எமது முதுசம் பிரசவித்திருக்கும் அனைத்து வகையான சிந்தனைப் பள்ளிகளிலிருந்தும் பயனடைவதை விரும்புகிறோம். ஆனால், அவை ஒவ்வொன்றையும் ஒன்றோடொன்று ஒப்பிட்டு ஆய்ந்து உரையாடலுக்கு உடப்டுத்துவதே பொருத்தமானது, ஒருபோதும் அவற்றை தீர்மானிக்கும் மூலாதாரங்களாக ஆக்கி விடக்கூடாது. அவற்றை ஒப்பிட்டு ஆயும்போது வஹியின் ஒளியில் நின்றே அவற்றை அணுக வேண்டும். வஹியின் கருத்தே தீர்மாணிக்கும் கருத்தாக இருக்கும். பதிலாக, அது முதுசத்தை பின்தொடரும் துணை மூலாதாரமாக மாறிவிடக்கூடாது.

2- விமர்சனங்கள் இன்றி உலக ஒழுங்கை நியாயம் கண்டு ஏற்றல்:

நவீனத்துவம் தோற்றுவித்திருக்கும் சிந்தனைகள், கோட்பாடுகளை விமர்சன சிந்தனையுடன் அணுகுவதற்குப் பதிலாக, நியாயம் கண்டு அவ்வொழுங்கை ஏற்கும் போக்கு எம்மிடம் மிகைப்பதை அவதானிக்கலாம். சிலர் மேற்கத்தய நவீனத்துவம் தோற்றுவித்திருக்கும் ஒழுங்கை விமர்சிக்கின்றனர். ஆனால், மிக மேலோட்டமாக. சில நடைமுறைகளை ஹராம், ஹலால் என பத்வா கூறி முடித்துக் கொள்கின்றனர். நடைமுறைக்குப் பின்னால் தொழிற்படும் தத்துவங்களை, கோட்பாடுகளை மறந்து விடுகின்றனர்.

உதாரணமாக, நவீன தேசிய அரசு எனும் கருத்தாக்கத்தில் ‘நற்பிரஜைத்துவம்’ இஸ்லாத்தில் உள்ளது என்று கூறிக் கொண்டு தேசியம் எனும் பெயரில் அரங்கேரும் ஆக்கிரமிப்பு, அதிகார கட்டமைப்பு போன்றவற்றை இலகுவாக கடந்துவிடுகிறோம். மேற்கத்தய வட்டி வங்கி எனும் கலந்துரையாடலில்  சலுகைகளைக் கூறுவதுடன் முற்றுப்புள்ளி வைக்கிறோம். வட்டி வங்கியின் பின்னால் தொழிட்படும் உயர் வர்க்கத்தினரின் பண சுரண்டல் பற்றி கரிசணை கொள்வதாக இல்லை. இங்கு நாம் கூறுவது, வட்டி வங்கியின் இயங்கும் ஒழுங்கை கேள்விக்குட்படுத்தும் உரையாடல்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதே.

இஸ்லாமிய நிறுவனங்கள் தனி நபருக்கான தீர்வுகளையே பெரும்பாலும் முன்வைக்கின்றன. நவீனத்துவம் தோற்றுவித்திருக்கும் நிறுவன ஒழுங்குகளை கேள்விக்குட்படுத்தும் சக்தியாக இஸ்லாம் இன்னும் முன்வைக்கப்படவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

3- அறிவின் மூலம் பற்றிய முரண்பாடு:

மேற்கின் சிந்தனை படையெடுப்பு காரணமாக அறிவு பற்றிய புரிதலில் மிகப் பெரும் கோளாறு இஸ்லாமிய சிந்தனைத் தளத்தில் தோன்றியது. அறிவை கூறுபோட்டுப் பார்த்தனர். மார்க்க அறிவு, உலக அறிவு; அல்குர்ஆன், சுன்னா அறிவு, மனித அறிவு போன்ற பிரிப்புமுறைகள் தோன்றின. இருவகை அறிவுகளுக்குமிடையில் அறிவுப் பரிமாற்றம் (Knowledge sharing) நடைபெற வேண்டும், அதனூடாக சமூக மாற்றம் ஒன்று நோக்கி நகர வேண்டும் என சிலர் கூறுகின்றனர். இங்கிருக்கும் சிக்கல், ஒரு துறை சார்ந்தவர்கள் அடுத்த துறை சார்ந்தவர்களது அத்துறை சார்ந்த அடிப்படை புரிதல்களையோ கலைச் சொற்களையோ புரிந்துகொள்ளக் கூட முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான். இவ்வாறிருக்கும் போது அறிவுப் பரிமாற்றம் எந்தளவு தூரம் தாக்கம் மிக்கதாக இருக்கும் என்பது மிகப் பெரிய கேள்வி.

இதற்கு மாற்றமாக, மகாசித் ஆய்வுமுறைமை இஸ்லாமிய அறிவு முறைமையை அதன் அடிப்படை மூலாதாரத்திலிருந்து பெற முனைகிறது. துறைகளை வஹியுடன் தொடர்புபடுத்த விரும்புகிறது. ஏழு தலையாய கருத்தாக்கங்களை வரைவதனூடாக துறைகளை இணைக்கலாம் என நம்புகிறது.

4- வஹிகலாச்சாரம் இரண்டையும் பிரித்தறியாமல் கட்டுடைப்பு செய்ய முனைதல்:

பின்நவீனத்துவத்தின் தாக்கத்தால் தோன்றியிருக்கும் கட்டுடைப்பு சிந்தனைப் பள்ளி வஹியின் புனிதத்துவத்தையும் கட்டுடைக்க விரும்புகிறது. அதிகாரம் பற்றிய அதன் உரையாடலில் அதிகாரத்தின் மையத்தில் இறைவன், வஹி கூட இருக்கக் கூடாது என்ற வாதத்தை முன்வைக்கிறது. சிலர் வஹியை கலாச்சார உற்பத்தி (Cultural product) என்கின்றனர். வஹியை இருப்பது போல வித்தியாசமான கலாச்சார சூழலுக்கு அமுலுக்கு கொண்டு வருவது சாத்தியமற்றது, விஞ்ஞானபூர்வமற்றது என்றெல்லாம் வாதாடுகின்றனர்.

நவீன இஸ்லாமிய சிந்தனை மேற்கூறிய சிக்கல்களுக்கும் மாட்டிக் கொண்டது போல, நவீன மகாசிதிய்ய சிந்தனையும் நியாயமான அளவு சிக்கிக் கொண்டுள்ளது எனலாம். மகாசிதிய ஆய்வுகள் வரலாற்று இமாம்களை மீட்டிக் கொண்டு இருக்கின்றன, அதனைத் தாண்டி பயணிக்கும் உத்வேகம் இன்னும் போதியளவு வரவில்லை எனலாம். மேற்கத்தைய ஒழுங்கை மகாசித் எனும் பெயரால் நியாயம் காணும் போக்கு கூட உள்ளது. செல்வத்தை பாதுகாத்தல் (ஹிப்லுல் மால்) எனும் மகாசிதின் அடிப்படை கருத்து மூலம் முதலாளித்துவ சுரண்டல் பொருளாதாரத்தின் எத்தனையோ கூறுகளை சரிகாணும் போக்கு கூட ஊடுறுவியிருக்கின்றன. மகாசித் சிந்தனை பெரியதொரு சீர்திருத்தத்தை வேண்டி நிற்கின்றது என்பதையே இவை சுட்டிக் காட்டுகின்றன.

பகுதி 03: மகாசித் ஆய்வு முறைமையின் அடிப்படைகள்

புத்தகத்தின் மையப்பகுதி இது. எமது ஆய்வுமுறைமை எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பதை இப்பகுதி விளக்குகிறது. மகாசித் ஆய்வுமுறைமை பின்வரும் மூன்று அடித்தளங்கள் மீது கட்டியெழுப்பப்படுகிறது:

1- அறிவின் மூலம்:

 அறிவின் மூலம் “வஹி” என்பதை ஆரம்பமாக வரையறுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. அறிவின் சொந்தக்காரன் அல்லாஹ், அவனே மனிதனுக்கு கற்பித்தான். கற்புலனாகும் விடயங்களையும், கற்புலனாகா விடயங்களையும் அறிபவன் அவன். அல்லாஹ்வுடைய அறிவு பூரணமானது. மனிதனது அறிவு குறைபாடுகள் கொண்டது. எனவே, வஹியின் ஒளியிலேயே நாம் ஏற்கனவே குறிப்பிட்டுக் காட்டிய ஏழு தலையாய கருத்தாக்கங்களையும் புரிந்துகொள்ள வேண்டும். இங்கு வஹியே அனைத்தையும் விட மேலாகிறது. அதுவே இலக்குகளையும் புரிதல்களையும் குழுக்களையும் பிரபஞ்ச விதிகளையும் பெறுமானங்களையும் ஆதாரங்களையும் ஏவல்களையும் முன்வைக்கின்றது, வரைகின்றது.

வஹியை புரிந்துகொள்ளும் போது “இலக்குமைய வாசிப்பு” முக்கியத்துவமானது. அடைய விரும்பும் இலக்கு, காரண, காரியங்கள் என்பன இங்கு வாசகன் அவதானம் குவிக்க வேண்டிய பகுதிகளாக இருக்கின்றன.

வஹியிலிருந்து கோட்பாடுகளை உருவாக்கும் போது “அல்குர்ஆனிய அரபு மொழி” முதன்மை இடத்தை வகிக்கிறது. அல்குர்ஆன் தனித்துவமான மொழியைக் கொண்டுள்ளது. சாதாரண அரபு மொழியை விட்டும் வித்தியாசமானது. எனவேதான், அல்குர்ஆனிய அரபு மொழி என்கிறோம். அல்குர்ஆனிலிருந்தே அதன் மொழியைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இரு பிழையான சிந்தனைப் போக்குகள் இன்று ஆதிக்கம் பெற்று வருவதை அவதானிக்கலாம். ஒன்று, அறிவின் மூலம் இறைவன் என்பதற்குப் பதிலாக மனிதன், மனித அறிவு, பொருளாதாரம், தேசம் என வேறொன்றை முன் நிறுத்துதல் எனும் சிந்தனைப் போக்கு. அடுத்தது, அறிவின் மூலம் என எதுவும் இல்லை என மையநிலையில் எதனையும் முன்நிறுத்தாது அனைத்தையும் கட்டுடைக்கும் சிந்தனைப் போக்கு.

2- நடைமுறை உலகைப் புரிந்துகொள்ளல்:

சடரீதியான பகுதியுடன் சேர்த்து மானசீக பகுதியையும் புரிந்துகொள்வதனூடாகவே உலகு பற்றிய முழுமையான பார்வை தோன்றுகிறது. வஹியை விட்டும் நீங்கிய நிலையில் மனிதனால்  கட்டமைக்கப்பட்டிருக்கும் சிந்தனைகள், கோட்பாடுகள், அணுகுமுறைகள், அளவீடுகளை விட்டும் ஆரம்பமாக மனித அறிவை நீக்கி சார்பியம் அற்ற நிலைக்கு அதனை கொண்டு வர வேண்டும். வஹியின் புரிதலிலிருந்து உலகு பற்றிய மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும். அல்குர்ஆன் கூறும் மானிட சமூகத்துடன் தொடர்புபடும் இலக்குகள் மற்றும் முஸ்லிம் சமூகத்துடன் தொடர்புபடும் இலக்குகள் நோக்கி உலகை நெறிப்படுத்தி வழிகாட்ட வேண்டிய புனர்நிர்மாணப் பணி ஒன்று தேவைப்படுகிறது.

மானிட சமூகத்துக்கான அல்குர்ஆனின் இலக்குகளை பின்வருமாறு கூறலாம்: இறைவனை வணங்குதல், உள்ளங்களை உயிர்ப்பித்தல், மனிதனை கண்ணியப்படுத்தல், நீதியை நிலைநாட்டல், பூமியை சீர்செய்தல். இவற்றுக்கு அப்பால் முஸ்லிம் சமூகத்துடன் தொடர்புபடும் இலக்குகளாக பின்வருவனவற்றை அடையாளப்படுத்த முடியும்: மனிதர்களுக்கு சாட்சி பகரக்கூடியவர்களாக மாறுதல், இறை அத்தாட்சிகளை ஆழ்ந்து கற்றல், சமூக ஒற்றுமை, பலவீனர்களுக்கு உதவுதல், நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்.

உலகம் பற்றிய மேற்கூறிய பார்வை நீண்ட திட்டமிடலை வேண்டி நிற்கிறது. எதிர்காலம், திட்டமிடல் எனும் இரு விடயங்களையும் உள்ளடக்கியது. எதிர்கால “வெற்றி” நோக்கிய பயணம்கூட வஹியின் ஒளியிலேயே வரையறுக்கப்பட வேண்டும். வஹி எதனை வெற்றி எனக் கூறுகிறதோ அது நோக்கியே பயணம் வரையப்பட வேண்டும்.

“மனித வரலாறு” அதன் அனைத்து காலங்களையும் உலகின் அனைத்து இட பரிமாணங்களையும் வாழும் அனைத்து சாராரையும் கருத்திற் கொண்டதாக அமைவது அவசியம். நாகரீகங்களது எழுச்சி, வீழ்ச்சி பற்றிய ஆய்வில் வஹியுடைய வழிகாட்டலே முதன்மை இடம் பிடிக்கிறது. மனிதர்களையும் நாடுகளையும் நாகரீகங்களையும் வஹியின் அளவீடு கொண்டே அளக்க வேண்டும்.

3- இஜ்திஹாதுக்கான அடிப்படைகள்:

இஸ்லாமிய சிந்தனைத் தளத்தில் இஜ்திஹாத் எனும் பரப்பு முக்கிய இடம் வகிக்கிறது. இஜ்திஹாத் எனும் பரப்பில் மூன்று விடயங்களில் எமது கவனம் குவிகிறது: இஜ்திஹாதுக்கான வரைவிலக்கணம், இஜ்திஹாத் செய்பவர்கள், இஜ்திஹாதின் விளைவுகள்.

இஜ்திஹாதுக்கான வரைவிலக்கணம்:

இஜ்திஹாத் என்பது பொதுவாக, கிளையம்சம் ஒன்றில், மத்ஹப் ஒன்றுக்குள்ளால் இருந்து தீர்வை முன்வைப்பதை குறிப்பதாகவே உள்ளது. நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று, பிக்ஹ் என்பது சட்டப்பகுதியோடு மாத்திரம் சுருங்கிய ஒன்றல்ல, மாற்றமாக அறிவின் எல்லா பரப்புக்களையும் உள்ளடக்கிய ஆழ்ந்த அறிவு என்ற கருத்திலிருந்து இஜ்திஹாதை வரைவிலக்கணப்படுத்த முனைகிறோம். இஜ்திஹாத் என்பது “அனைத்து மானிட அறிவுப் பகுதிகளிலும் கடும் பிரயத்தனத்தை எடுத்தல்” எனலாம்.

இப்புரிதலில் இருந்து இன்றிருக்கும் அறிவுப் பகுதிகளை பிரதான நான்கு பகிதிகளாக வகுக்கலாம்:
* வணக்கங்கள்
* நிபுணத்துவ துறைகள் (பொருளாதாரம், அரசியல், சட்டம், மருத்துவம், கலை, இலக்கியம்…)
* இன்றைய உலக ஒழுங்கில் செல்வாக்கு பெற்றிருக்கும் வெளிப்பாடுகள் (நாஸ்திகம், மொழிகள், தொற்றுநோய், வங்கி, அடக்குமுறை, மீடியா, வறுமை, தேசிய அரச ஒழுங்கு…),
* நிறுவனங்கள்.

இவற்றுள் காலத்தால் மாறாத நிலைத்த தன்மை கொண்டவை, மாறுந்தன்மை கொண்டவை ஆகிய இரு பரிமாணங்களும் சரியாக வகுக்கப்பட வேண்டும். உதாரணமாக, வணக்கங்கள் என்ற பகுதியில் இஜ்திஹாதின் எல்லை மிகவும் குறுகியது. நிபுணத்துவ துறைகளில் வஹி முன்வைத்திருக்கும் அடிப்படை விழுமியங்கள், விதிகளினூடாக இஜ்திஹாத் நடைபெற வேண்டும்.

இஜ்திஹாத் செய்பவர்கள்:

இஜ்திஹாத் பற்றிய மேற்கூறிய புரிதலிலிருந்து இஜ்திஹாத் செய்பவர்கள் “அறிவு நீதியாக கடும் பிரயத்தனம் எடுக்கும் தனிநபர்கள், குழுக்கள், நிறுவனங்கள்” என அனைத்தும் இஜ்திஹாதின் பங்காளிகள் எனக் கூறலாம். அனைத்து துறைகளும் இஜ்திஹாதுக்கு உட்படுகின்றன. இஜ்திஹாத் செய்பவர் குறிப்பிட்ட துறையில் போதிய அறிவுப் பின்புலம் பெற்றவராகவும், சரியான ஆய்வு முறைமையை கடைபிடிப்பவராகவும், அனுபவம் ரீதியான அறிவு கொண்டவராகவும் இருக்க வேண்டும்.  வஹியை கற்று, வஹியின் ஒளியின் ஏழு தலையாய கருத்தாக்கங்களினூடாக (இலக்குகள், புரிதல்கள், குழுக்கள், பிரபஞ்ச விதிகள், பெறுமானங்கள், ஆதாரங்கள், ஏவல்கள்) தன் துறைசார்ந்த பகுதியில் கோட்பாட்டு சட்டகமொன்றை உருவாக்கிக் கொள்வதனூடாக இஜ்திஹாதை மேற்கொள்பவராக இருப்பார்.

இஜ்திஹாதின் விளைவுகள்:

இவ்வஹையான இஜ்திஹாத் இருவகையான விளைவுகளை யாசிக்கிறது. வஹியின் ஒளியில் உருவாக்கப்படும் சட்டகத்தின் பின்புலத்தில் நலன்கள், தீங்குகள் கண்டடையப்படுதல் முதல் விளைவு. அதனூடாக நலன்கள் வளர்த்தெடுக்கப்படுவதற்கும் தீங்குகள் குறைக்கப்படுவதற்குமான  வேலைத்திட்டங்கள் உருவாக்கப்படும். அடுத்த விளைவு, குறிப்பிட்டதொரு செயலுக்கான நேரடியான ஹராம், ஹலால் தீர்ப்பை பெற்றுக் கொள்ளலாகும்.

Thanks :- Rishard Najimudeen

Source :- https://www.rishardnajimudeen.com/?p=13687

Related Posts

Leave a Comment