இஸ்லாமிய ஆய்வுமுறைமைக்கான சமகால மீள்வடிவமைப்பு நோக்கி
பேராசிரியர் ஜாசிர் அவ்தாவுடைய “Re-envisioning Islamic Scholarship- Maqasid methodology as a new approach” எனும் புத்தகம் (அரபு மொழியில் இதன் தலைப்பு المنهجية المقاصدية نحو إعادة صياغة معاصرة للإجتهاد الإسلامي என்றமைகிறது) முன்னுரையுடன் ஆரம்பித்து, அறிமுகக் குறிப்பு, நவீன இஜ்திஹாத் முறைமைகளது சிக்கல்கள், மகாசித் ஆய்வுமுறைமைக்கான அடிப்படைகள், இஜ்திஹாதுக்குரிய ஐந்து எட்டுக்கள், கோட்பாட்டுருவாக்கத்துக்கான ஏழு அம்சங்கள், அவற்றைக் காணும் முறைமைகள், இஸ்லாமிய கற்கைகளுக்கான பரிந்துரைக்கப்படும் ஒழுங்கு ஆகிய ஆறு பிரதான தலைப்புக்களை உள்ளடக்கியிருக்கிறது.
புத்தகத்தின் கருத்துக்களை இக்கட்டுரை சுருக்கித் தருகிறது. நவீன இஸ்லாமிய சிந்தனையில், மகாசித் சிந்தனையில், சமூக சீர்திருத்த முறைமையில் புதிய ஒளியை பாய்ச்சும் இப்புத்தகம் மிக விரிந்த தளத்தில் வாசிக்கப்பட வேண்டும், கலந்துரையாடப்பட வேண்டும் என்பதே எமது அவா.
பகுதி 04: இஜ்திஹாதுக்கான ஐந்து எட்டுக்கள்
ஆழ்ந்த புரிதலுக்கான வட்டம் எனவும் இதனை குறிப்பிடலாம். இவ்வட்டம் பின்வரும் ஐந்து கட்டங்களைக் கொண்டது:
1- ஆய்வின் நோக்கம்
2- அல்குர்ஆன், சுன்னாவை வாசித்தல்
3- கோட்பாட்டு சட்டகத்தை உருவாக்கல்
4- செல்வாக்கு செலுத்தும் கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் விமர்சன நோக்கில் அணுகுதல்
5- புதிய கோட்பாடுகளைத் தோற்றுவித்தல்
நாம் பிரேரிக்கும் ஆய்வு முறைமையில் ஆய்வின் நோக்கம் முக்கியம் பெறுகிறது. சில போது ஆய்வின் தலைப்புகள் ஒன்றை ஒத்ததாக இன்னொன்று அமைகிறது. ஆனால், வித்தியாசப்பட்ட நோக்கங்கள் இரண்டுக்குமிடையிலான வேறுபாட்டை மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமாக மாற்றி விடுகிறது. பொருளாதார அபிவிருத்தி எனும் தலைப்பை எடுத்துக் கொள்வோம். ஒரு ஆய்வு வறுமை மட்டத்தை குறைப்பதை இலக்காகக் கொள்கிறது. இதற்கு முற்றிலும் மாற்றமாக இன்னொரு ஆய்வு குறிப்பிட்டதொரு சமூகத்தின் வருமானத்தை அதிகரிப்பதை மாத்திரம் இலக்காகக் கொள்கிறது. இரண்டாவது தலைப்பு முறையற்ற, அநீதியான வருமான முறைமைகளையும் அங்கீகரிக்கும் போக்கை தலைப்பினுள் மறைமுகமாகக் கொள்கிறது.
ஆரம்பமாக, இலக்கு மிகக் கவனமாக வரையறுக்கப்பட வேண்டும். சட்டம் மிகைத்தல் என்பதை விட சட்டத்தின் நீதி இலக்காக்கப்பட வேண்டும். தேசத்தின் செல்வாக்கு என்பதைவிட தேசத்தின் நீதி முக்கியமானது. சந்தையின் சுதந்திரம் என்ற இலக்கை விட சந்தையின் நீதி முக்கியமானது. இவ்விலக்கை சரியாக வரையறுத்துக் கொள்வதில் பிழை விடும்போது அதன் விளைவு நீதி அநீதியாக மாற்றமைடைகிறது, கருணை அடக்குமுறையாக பரிணாமம் எடுக்கிறது.
அடுத்த கட்டம், அல்குர்ஆன், சுன்னா மீதான தொடர்ந்தேர்ச்சையான வாசிப்பு. இங்கு, “பெயர்கள்” முக்கியம் பெறுகின்றன. அல்லாஹ் ஆதமுக்கு பெயர்களைக் கற்றுக் கொடுத்தான். பெயர்கள் அறிவையும், கோட்பாடுகளையும் உருவாக்குகின்றன. பெயர்களையும் அதனோடு தொடர்பான அடையாளக் குறியீடுகளையும் கவனமாக உள்வாங்கிக் கொள்வதனூடாக கோட்பாடுகளை உருவாக்க முனைகிறோம். அதனோடு இணைந்ததாக அல்லாஹ்வின் அழகிய பெயர்களையும் அல்குர்ஆன் திருப்பித் திருப்பிக் கூறி எமது கவனத்தை ஈர்க்கிறது. குறிப்பாக, நாம் பின்வரும் ஏழு வகையான கருத்தாக்கங்களை அல்குர்ஆன், சுன்னாவிலிருந்து எடுக்கிறோம்:
இலக்குகள், எண்ணக்கருக்கள், குழுக்கள், இறைவிதிகள், பெறுமானங்கள், ஆதாரங்கள், ஏவல்கள் (வஹி குறிப்புடும் இலக்குகளை நோக்கி நகர்தல், வஹியின் ஒளியில் எண்ணக்கருக்களை சரிப்படுத்தல், குழுக்களை வகைப்படுத்தல், இறைவிதிகளை கருத்திற் கொள்ளல், பெறுமானங்களை எடுத்துக் கொள்ளல், ஆதாரங்கள் அடிப்படையில் மேற்கொள்ளல், ஏவல், விலக்கல்களை எடுத்து நடத்தல்)
‘குடும்பம்’ சார்ந்த ஒட்டுமொத்த பார்வை ஒன்றை அல்குர்ஆன் உடைய சொற்களினூடாக உருவாக்குவதற்கான முயற்சியை கீழே தருகிறோம்:
‘மருத்துவம்’ சார்ந்த ஒட்டுமொத்த பார்வை ஒன்றை அல்குர்ஆன் உடைய சொற்களினூடாக உருவாக்குவதற்கான முயற்சியையும் கீழே தருகிறோம்:
வஹி மீது தொடர்ந்தேர்ச்சையான அவதானம், வாசிப்பு மூலம் நாம் பிரேரிக்கும் ஏழு அடிப்படைகளையும் உள்வாங்கிக் கொண்டு அடுத்த கட்டம் நோக்கி நகர வேண்டும். எமது பாரம்பரிய இஸ்லாமிய சிந்தனை, நவீன இஸ்லாமிய சிந்தனையுடனான விமர்சன ரீதியான அணுகல் அடுத்து முக்கியமானது. வஹி மீதான ஆழ்ந்த வாசிப்பினூடாக கோட்பாடுகளை உருவாக்க முனைகிறோம். வஹியுடைய தனித் தனி வசனங்களை ஒன்றோடொன்று இணைத்து, தொடர்புகளை ஏற்படுத்தி கோட்பாடுகள் உருவாக்கப்பட வேண்டும் என நம்புகிறோம்.
பகுதி 05: ஏழு கருத்தாக்கங்களும் அவற்றை காணும் முறைமைகளும்
நாம் பிரேரிக்கும் ஏழு கருத்தாக்கங்களையும் காணும் முறைமை எமது உரையாடலில் முக்கியம் பெறுகிறது. இங்கு நாம் ஏழு கருத்தாக்கங்களையும் தனித்தனியாக விளக்க முற்படவில்லை. மாற்றமாக சில உதாரணங்களை மாத்திரம் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். அத்தோடு அரபுமொழி பற்றிய ஆழ்ந்த புரிதல் இப்பகுதியில் எமக்கு மிகவும் உதவுகிறது என்பதையும் வலியுறுத்துகிறோம்.
அல்குர்ஆன் சில எண்ணக்கருக்களை (Concepts) விரிந்த விளக்கங்கள் இன்றி ஒரு வார்த்தையில் குறிப்பிட்டுச் செல்லும். உதாரணமாக ‘ஷூரா‘ என்ற சொல். ஷூரா பற்றி நேரடியாக பேசும் போது அல்குர்ஆன் அந்த சொல்லை மாத்திரம் குறிப்பிட்டுச் செல்கிறது. ஆனால், அல்குர்ஆனில் வேறு பல இடங்களில் ஷூராவின் பிரயோகம் வித்தியாசமான வார்த்தைகளில் விளக்கப்பட்டுள்ளது. ஷூரா பற்றி புரிந்துகொள்ளும் போது அதனோடு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபடும் அனைத்து வசனங்களையும் இணைத்தே புரிய வேண்டும். இன்னும் சில எண்ணக்கருக்களை அல்குர்ஆன் ஓரளவு விரிவாக விளக்கியுள்ளது. உதாரணமாக ‘பிர்‘, ‘நிபாக்‘ போன்ற சொற்களைக் குறிப்பிடலாம். கருத்துக்களை ஆழமாக புரிந்துகொள்ள வித்தியாசமான அல்குர்ஆன் கிராஅத்துக்களும் உதவுகின்றன.
இன்னும் சில எண்ணக்கருக்களை விளங்க அதனோடு தொடர்புபட்டு வரும் சொற்களையும் ஆழ்ந்த அர்த்தத்தத்துடன் புரிந்துகொள்வது அவசியமாகிறது. அது எமது உலகப்பார்வையை மென்மேலும் விரிவுபடுத்துகிறது. உதாரணமாக அல்குர்ஆன் குறிப்பிடும் ‘ஹைர்‘ (خير) என்ற சொல்லை ‘ஹசன்‘ (حسن) என்ற சொல்லோடு இணைத்துப் பார்த்தலைக் கூறலாம். ‘கதஃ‘ (خطأ) என்ற சொல்லை ‘தன்ப்‘ (ذنب)என்ற சொல்லோடு இணைத்துப் பார்க்கின்ற போது கருத்து விரிவுபடுகிறது.
சிலபோது எண்ணக்கருக்களை ஒன்றோடு இன்னொன்றை இணைத்துப் பார்க்க வேண்டி வரலாம். உதாரணமாக ‘அர்லுல்லாஹ்‘, ‘ஹுதூதுல்லாஹ்‘, ‘ஆயாதுல்லாஹ்‘ போன்ற எண்ணக்கருக்களை ஒன்றோடொன்றை இணைத்துப் பார்க்கின்ற போதே எண்ணக்கருக்கள் தெளிவாகின்றன.
குழுக்களை புரிந்துகொள்ளும் போது வரலாற்றோட்டம், நடைமுறை, அதிலிருக்கும் சிக்கல்கள் போன்ற அனைத்தையும் உள்வாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. உதாரணமாக ‘ஆட்சியாளர்கள்‘, ‘உலமாக்கள்‘ இரு சாராருக்குமிடையிலான தொடர்பு. சில போது ஷூராவை நடைமுறைப்படுத்தும் போது ஷூரா அடிப்படையில் எடுக்கும் கருத்தை ஆட்சியாளன் கட்டாயமாக எடுக்க வேண்டுமா? இல்லையா? என்ற உரையாடலில் இன்றைய ஆட்சி ஒழுங்கு, சர்வதிகாரம் போன்ற தன்மைகள் உள்வாங்கிய நிலையிலேயே முடிவுகள் எட்டப்பட வேண்டும். எடுக்கும் முடிவு சர்வதிகாரத்தை தோற்றுவிக்கவோ, இருக்கும் சர்வதிகாரத்தை பலப்படுத்தவோ வழியமைத்துவிடக் கூடாது.
அல்குர்ஆன் குறிப்பிடும் சில கதாபாத்திரங்களது பண்புகள் எல்லா காலத்துக்கும் பொருந்திச் செல்கின்றன. உதாரணமாக பிர்அவ்னுடைய சர்வதிகார ஆட்சியும் அவனது அகங்காரமும் ஆட்சியாளர்கள் எனும் குழுவுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடியவை. சபஃ அரசி ஆட்சியாளர்களுக்கான இன்னொரு உதாரணம். குழுக்கள் மனிதர்களோடு மாத்திரம் சுருங்கி விடுவதில்லை. மாற்றமாக கால்நடைகள், விலங்குகள், மீன் போன்ற நீர்வாழும் உயிரினங்கள் என பல வகைப்படுகின்றன. ஜின்கள் போன்ற மனித கற்புலனாகாத உயிரினங்களையும் ஒரு குழுவாக அல்குர்ஆன் குறிப்பிட்டுக் காட்டுகிறது. அல்குர்ஆன் குறிப்பிடும் குழுக்கள், அக்குழுக்களது பண்புகள் மிகக் கவனமான வாசிப்பை வேண்டி நிற்கின்றன.
பேராசிரியர் ஜாசிர் அவ்தா ஓரளவு விரிவாக விளக்கியிருக்கும் பகுதியின் சில புள்ளிகளையே நாம் இங்கு தொட்டுக் காட்டியிருக்கிறோம் என்பதைக் கருத்திற் கொள்க.
பகுதி 06: இஸ்லாமிய கற்கைகளுக்காக பிரேரிக்கப்படும் புதிய ஒழுங்கு
நாம் மேலே விளக்கிய மகாசித் ஆய்வு முறைமை நடைமுறையில் எவ்வாறு சாத்தியமாகும் என்பதையே இப்பகுதி விளக்க முனைகிறது. அவ்வாய்வு முறைமை மூன்று பகுதிகளில் தாக்கம் செலுத்தக் கூடியதாக இருக்க வேண்டும் எனக் கருதுகிறோம்: ஆய்வுப்பரப்பு, கற்புத்தல் மற்றும் பயிற்றுவிப்பு, நிறுவன வேலைத்திட்டம். ஆய்வு ரீதியான வேலைத்திட்டம் சிந்தனைகளையும், புத்தகங்களையும், அறிவு உற்பத்திக்கான வழிகளையும் தோற்றுவிக்கின்றன. அவை அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வகையிலான கற்பித்தலுக்கும் பயிற்றுவித்தலுக்கும் உதவுகின்றன. அறிவு, உள்ளம், நடத்தை ஆகிய மூன்று பகுதிகளையும் உள்ளடக்கிய வகையிலான பயிற்றுவிப்பு அவசியமாகிறது. இவ்வகையான கற்பித்தலால் உருவாகும் ஆளுமைகள் நிறுவன ரீதியாக இயங்குவதற்கான நிறுவன கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
இன்று முஸ்லிம்களிடம் இருக்கும் கற்றல், கற்பித்தல் முறைமையை விட்டும் வித்தியாசமான ஒழுங்கொன்றையே நாம் பிரேரிக்கிறோம். “இஸ்லாமிய கற்கைகள்” புதியதொரு ஒழுங்கைப் பெற வேண்டும் என உறுதியாக நம்புகிறோம். பொதுவாக முஸ்லிம்கள் பாரம்பரிய கலைகளில் அல்லது இஸ்லாமிய மூலாதாரங்களை எவ்விதத்திலும் தொடர்புபடுத்தாத நிலையில் வேறு துறைகளில் கற்பவர்களாக உள்ளனர். குறிப்பாக மேற்கத்தய நாடுகளில் கற்பவர்களும் மேற்கத்தய நாடுகள் இயக்கும் கிழக்குலக பல்கலைக்கழகங்களில் கற்பவர்களும் மதச்சார்பின்மை உலகப்பார்வையினூடாகவே பயிற்றுவிக்கப்படுகின்றனர். தப்சீர், ஹதீஸ், பிக்ஹ், தசவ்வுப், இஸ்லாமிய வரலாறு என பாரம்பரிய கலைகள் விரிவடைகின்றன. மறுபுறம், அரசியல், சமூகவியல், தத்துவம், சட்டம், கலை, இலக்கியம், மொழி என அடுத்த பகுதி விரிவடைகிறது.
நாம் ஆரம்பத்தில் விளக்கிய வகையில், முஸ்லிம் சமூகம் அடைய வேண்டிய இலக்குகள், மனித சமூகம் அடைய வேண்டிய இலக்குகள் என இரு இலக்குகளையும் நோக்கி நகர்வதற்கு இவ்விரு வகை கற்பித்தல் முறைமைகளும் போதுமானதாக இல்லை. இலக்குகளை அடையும் வகையில் இஸ்லாமிய கற்கைகள் மீளொழுங்கு செய்யப்பட வேண்டும் எனக் கருதுகிறோம். கற்கைகள் பின்வரும் நான்கு பிரதான பகுதிகளாக பிரிகின்றன:
1- Usuli Studies
2- Disciplinary Studies
3- Phenomena Studies
4- Strategic Studies
Usuli Studies:
நேரடியாக வஹியுடன் தொடர்புபடும் கலைகளை இக்கற்கை உள்ளடக்குகிறது. தப்சீர், ஹதீஸ், இல்முல் கலாம், பிக்ஹ் போன்ற பகுதிகளைக் கொண்டது. இங்கு ஒவ்வொரு கலையையும் வரலாற்றோடு இணைத்துப் பார்க்கப்படுவதை விட வஹியுடன் அதிகம் இணைத்துப் பார்க்கப்படுவதையே வலியுறுத்துகிறோம். ஒவ்வொரு கலைகளிலும் பிரயோகிக்கப்பட்டு வந்திருக்கும் ஆய்வு முறைமை விமர்சன ரீதியாக அணுகப்பட்டு நவீன கால சவால்களை எதிர்கொள்ளும் விதமான ஆய்வுமுறைமை ஒன்றை தோற்றுவிப்பதே இங்கு முக்கியம் பெறுகிறது. உதாரணமாக, நவீன கால சவால்களை உரையாடும் முழுமையானதொரு தப்சீர் வேலைத்திட்டம் உருவாக்கப்பட வேண்டியுள்ளது. ஹதீஸ்களைப் பொறுத்தவரை, அதன் பாரம்பரிய தலைப்பொழுங்கு நவீன கால தேவைகளுக்கு ஏற்ப மீளொழுங்கு செய்யப்பட வேண்டும் எனலாம். மதன், சனத் பற்றிய ஆழ்ந்த ஆய்வு தேவைப்படுகிறது. குறிப்பாக பெண், அரசியல், இஸ்ராஈலிய்யாத் ஆகிய மூன்று தலைப்புக்களுடனும் தொடர்புபடும் ஹதீஸ்கள் அல்குர்ஆனின் ஒளியில் நின்று மீள்வாசிக்கப்பட வேண்டும். இல்முல் கலாம் துறையில் ஆரம்ப கால முரண்பாடுகளைத் தாண்டி இன்று சமூகம் எதிர்கொள்ளும் மதச்சார்பின்மை, நாஸ்திகம், தாரான்மைவாதம் போன்ற கருத்தாக்கங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும். பாரம்பரிய பிரிப்புமுறைகளான அஷ்அரி, மாத்ருதி, சலபி, ஷீஆ, சூபி போன்ற வகைப்பாடுகளை கடந்து புதிய ஒழுங்குகள் வகுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. பிக்ஹ் துறை அடிப்படை மூலாதாரங்களான அல்குர்ஆன், சுன்னாவையும் இஜ்திஹாதுக்கான வாயில்களான இஜ்மா, கியாஸ் போன்ற பகுதிகளையும் சரியாக வகைப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.
Disciplinary Studies:
நவீன கால துறைகளை விமர்சன ரீதியாக அணுக வேண்டியுள்ளது. அத்துறையை முழுமையாக மறுப்பதற்கோ, நியாயம் கண்டு முழுமையாக ஏற்றுக் கொள்வதற்கோ அல்ல. வஹியின் ஒளியில் அவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக. சில போது பகுதி ரீதியான ஒழுங்குபடுத்தல் தேவைப்படும். இன்னும் சில போது முழுமையான ஒழுங்குபடுத்தல் நோக்கி நகர வேண்டியிருக்கும். மேற்கில் தோற்றம்பெற்ற மதச்சார்பின்மை பின்னணியிலேயே இவ்வகை கலைகள் தோற்றம் பெற்றிருக்கின்றன. வஹியின் ஒளியில் நாம் இத்துறைகளை அணுகும் போது முரண்படும் இடங்கள் இருப்பது இயல்பானது. நிலம், மதம், மனிதன், சொத்துரிமை, செல்வம், ஆட்சி, அறிவு, விலங்கு, புத்தி, ஆரோக்கியம், குடும்பம், அரசு, பலம், நீதி, சத்தியம், அழகு, நலன், வெற்றி போன்ற எண்ணக்கருக்களை வரையறுப்பதில் கூட இஸ்லாமிய கண்ணோட்டம் வித்தியாசப்பட்டமைகிறது. கலைகளை கட்டியெழுப்புவதில் இது நிச்சயம் தாக்கம் செலுத்தக் கூடியதாக இருக்கும்.
அல்குர்ஆனின் ஒளியில் குழுக்களை வரையறுக்கும் போதும் வித்தியாசங்கள் தோன்றுகின்றன. சீர்செய்பவர் (مصلح), சீரழிப்பவர் (مفسد), அறிஞர்கள் (علماء), மடையர்கள் (سفهاء), உண்மையானவர் (صادق), இரு முகம்கொண்டவன் (منافق), தேவையுடையவர் (ذو الحاجة), அதிகாரமிக்க பொறுப்பாளர் (أولو الأمر), பணக்காரர்கள் (أغنياء), ஏழைகள் (فقراء) போன்ற குழுக்கள் இன்றைய குழு பிரிப்புமுறைக்கு முற்றிலும் வேறுபட்டமைகிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட துறையில் பாண்டித்யம் பெறல் இன்று அதிகம் வலியுறுத்தப்பட வேன்டியுள்ளது. பொருளாதாரம், அரசியல், கலை, இலக்கியம், உளவியல் என ஒன்று இன்னொன்றோடு இருக்கமான பிணைப்பைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு துறைகளிலும் உள்ள கோட்பாடுகள், சிந்தனையாளர்கள் பற்றிய ஆழ்ந்த புரிதலின் பின்னணியிலேயே வஹியுடனான ஒப்பீட்டாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். ஒப்பீட்டய்வு என்பது ஏனைய கோட்பாடுகளையும் சிந்தனைகளையும் முழுமையாக மறுப்பதல்ல. எத்தனையோ நல்ல பகுதிகள் இருக்கின்றன. அவற்றை உள்வாங்கிக் கொள்வது அவசியம்.
Phenomena Studies:
இத்துறை ஊடாக சமூகங்கள், மனிதன், வறுமை, சூழல் சார்ந்த பிரச்சினைகள், சந்தை, தேசம், தொழிநுட்பம், மொழி, சமூக நீதி, நிலம் சார்ந்த ஆய்வுகள், நோய், தொற்று சார்ந்த ஆய்வுகள், அனர்த்தங்கள், நீதியான ஆட்சி, அடக்குமுறை ஆட்சி, கைத்தொழில்கள், நாகரீகம், கலாச்சாரம் பற்றிய ஆய்வுகள், இனவாதம் போன்ற இன்னும் பல பகுதிகள் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றன. அனைத்து வகை சார்பியங்களையும் தாண்டிய சுயாதீனமான ஆய்வாக இருப்பது அவசியம்.
நாம் ஆரம்பத்தில் விளக்கிக் கூறிய வகையில், முஸ்லிம் சமூகம் அடைந்துகொள்ள வேண்டிய இலக்குகள், மனித சமூகம் அடைய வேண்டிய இலக்குகளை நோக்கமாகக் கொண்ட நகர்வுக்கு இவ்வகையான ஆய்வுகள் பெரிதும் முக்கியம் பெறுகின்றன. இன்று பேசுபொருளாகியிருக்கும் நாஸ்திகம், வறுமை, தொற்றுநோய், மருந்து பதுக்கல், இன சுத்திகரிப்பு, சர்வதேச போராட்டங்கள், இஸ்லாமோபோபியா, அகதிகள், உளவியல் நோய்கள் புறநடையான ஆண்-பெண் உறவுகள், போதைப்பொருள் பாவணை, பெண்களுக்கெதிரான அநியாயங்கள் என விரிந்து செல்லும் இன்றைய தோற்றப்பாடுகளில் பத்வா நிறுவனங்கள் ஹராம், ஹலால் என்று கூறுவதுடன் நிறுத்திக் கொள்வது போதுமானதாக இல்லை. தோற்றப்பாடுகளை முழுமையாக உள்வாங்கிய ஆய்வுகளும் பத்வாக்களும் தீர்வுக்கான வேலைத்திட்டங்களும் அவசியப்படுகின்றன.
Strategic Studies:
நடைமுறைப்படுத்தலுக்கான நிறுவன ஒழுங்கு பற்றிய ஆய்வை இப்பகுதி குறிக்கிறது. கற்பித்தல் நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், சமூக நிறுவனங்கள், பொருளாதாரம்சார் நிறுவனங்கள் என்று இப்பகுதி விரிவடைகிறது. இஸ்லாமிய வரலாற்றில் இருந்த வக்ப், மஸ்ஜித் போன்ற நிறுவனங்கள் ஆற்றிய பங்களிப்பை இன்று எவ்வாறு உயிர்ப்பிக்கலாம் போன்ற ஆய்வுகள் அவசியமானவை. இரு பகுதிகள் இங்கு தொடர்புபடுகின்றன. ஒன்று ஆய்வுகள் எனும் பகுதி. அடுத்தது நடைமுறைப்படுத்தல் எனும் பகுதி. இன்றிருக்கும் உலக ஒழுங்கில் நிறுவனங்கள் எவ்வைகையில் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்ற ஆழ்ந்த புரிதல் அவசியப்படுகிறது.
Thanks :- Rishard Najimudeen
Source :- https://www.rishardnajimudeen.com/?p=13714