எதிர்மறையான சிந்தனைகளை தவிர்ப்போம்

by Mohamed Anas

Jonathan Kestenbaum என்ற எழுத்தாளரின் (ஆங்கிலத்தில் எழுதப்பட்ட) கருத்தை தழுவிய ஒரு பதிவை சமூக வலைதளம் ஒன்றில் படிக்க நேர்ந்தது. அது ஒரு சுவாரசியமான சம்பவம்….!!!

புதிதாக திருமணம் முடித்த ஜோடிகள் இருவர் புதிய வீட்டிற்கு குடி பெயர்ந்தனர்.

எப்பொழுதும் காலையில் அண்டை வீட்டுக்காரப் பெண் ஒருவர், துணி துவைத்து அந்தப் பெண்ணின் வீட்டு மாடியில் துணி காயப்போடுவதை கண்டு, அதைக் குறித்து – அந்த புதிதாக குடி பெயர்ந்த பெண்மணி விமர்சிப்பதை வழக்கமாக கொண்டார் ,

காரணம், அவர் துவைக்கும் துணிகள் மங்கிப்போய், முறையாக துவைக்காமல் இருப்பதாக, இந்த பெண்மணி தனது கணவரிடம் தினசரி கூறிக் கொண்டே இருப்பார் ,

ஒவ்வொரு காலைப் பொழுதும் இவ்வாறே கழிந்து கொண்டிருந்தது.

ஒருநாள், வழமைக்கு மாறாக, அந்தப் பெண்மணி துவைத்த துணிகள் ஜொலித்து மின்னியது.

இதற்கு என்ன காரணம் என்று அறிந்து கொள்வதில், அந்த பெண்மணி மிகவும் ஆர்வத்தை கொண்டவராக, தனது கணவருடன்
‘இது எவ்வாறு சாத்தியம்’ என்று கேட்க,

கணவர் அதற்கு கூறிய பதில் என்ன தெரியுமா?

“இன்று காலை தான், நமது ஜன்னலின் மாசுபடிந்த கண்ணாடியை துடைத்தேன்” என்றார்

இது தான், நமது அன்றாட வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் பிரச்சனைக்கு ஒரு நல்ல உதாரணம் …..!!!

இவ்வாறு தான், நாம் நமது வாழ்க்கையில் தவறாக புரிந்து கொண்டு, நண்பர்களை பகைவர்களாக, பகைவர்களை நண்பர்களாக – புரிந்து கொண்டிருக்கிறோம்.

பலரின் எதார்த்தமான நிலைமைகளை, கொஞ்சம் கூட நாவு கூசாமல், நமது முறையற்ற பார்வையால் தவறாக புரிந்து கொண்டு, அவர்களை விமர்சிக்க ஆரம்பித்து விடுகிறோம் ..!!!

நம்மிடத்தில் இருக்கும் குறைகள், நமக்கு தெரிவதில்லை. பிறரின் குறைகளைத் தேடித் திரிய ஆரம்பித்து விடுகிறோம். இது ஒரு உளநோய்.

பொதுவாக அறியாத விடயங்களுக்கு, மனிதர்கள் எப்பொழுதுமே விரோதிகள் தான்.
الناس اعداء لما جهلوا

மாற்றுக்கருத்துக்கள் நமக்குப் புதியதாக இருக்கலாம். சில சமயம் புரியாததாகவும் இருக்கலாம்.
காரணம், நமக்கு அதில் தெளிவும் இல்லை. விளக்கமும் இல்லை. நமக்கு பிடிக்காத ஒரே காரணத்தினால், நம்மைச் சுற்றி இருப்பவர்களை, நமது எதிர்மறை சிந்தனைகளால் வசப்படுத்தி, பகைமை பாராட்டுவது,
எள்ளி நகையாடுவது, கேலி கிண்டல்கள் செய்வது – நமது பக்குவமின்மையையும், அறிவின்மையையும், நம்மை பார்ப்பவர்களுக்கு தெளிவாக விளக்கி விடும்.

குறுகிய பார்வை, இறுகிய மனம், வெறுப்பு, நிம்மதியின்மை, இவைகள் அனைத்தும் உளவியல் ரீதியான நோயினால் பாதிக்கப்பட்ட சிலரின் எதிர்மறையான சிந்தனைகளின் வெளிப்பாடுகளே !!!

கருப்பு கண்ணாடியைப் போட்டு பார்த்தால் பார்க்கப்படும் அனைத்தும், கருப்பாகத் தான் தெரியும்.

இன்று, நம்மில் பலர் மன அழுத்தத்திற்கும், புதிது புதிதான நோய்களுக்கும், பலியாவதை நாம் அன்றாடம் கண்டுகொண்டிருக்கிறோம்.
அதற்கு அடிப்படையான காரணம், எதிர்மறையான சிந்தனைகளே !!!

வாழ்வில் விரக்தி, வியாபாரத்தில் தோல்வி, நட்பில் விரிசல், இன்னும் பல…., வாழ்வின் பின்னடைவுகளாக காணப்படுகிறது.

ஒரு சிறிய நேர்மறையான சிந்தனை, மிகப்பெரிய இஸ்லாமிய சித்தாந்தங்களும் சமூகமும் உருவாவதற்கு காரணமாக இருந்தது என்றால் அது மிகையானதல்ல.

Optimism is an Act of Worship

சாதகமான நேர்மறையான சிந்தனைகள் – அதுவும் ஒரு வழிபாடுதான்.

“Hoping for good is also an act of worship of Allah” (Tirmidhi and Hakim).
‘நல்லதாகவே நடக்கும்’ என்ற நேர்மறையான சிந்தனைகள், இறைவனை வழிபடுவதற்கு சமம்.
நூல்: திர்மிதீ ,ஹாகிம்

4576 – عن أبي هريرة – رضي الله عنه – قال : سمعت رسول الله – صلى الله عليه وسلم – يقول : ” لا طيرة ، وخيرها الفأل ” قالوا : وما الفأل ؟ قال : ( الكلمة الصالحة يسمعها أحدكم ) . متفق عليه .

அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதாக கூறுகிறார்கள். சகுனம் என்பது மார்க்கத்தில் இல்லை. “ஃபால்”, என்பது அதில் சிறந்தது என்றார்கள்.

ஃபால் என்றால் என்ன என்று கேட்டார்கள்?

உங்களில் ஒருவர் காதால் கேட்கும் நல்ல வார்த்தைகள் என்றார்கள்.

நூல்- ஸஹீஹுல் புகாரி – முஸ்லிம்

நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) தங்களது மனைவி ஹாஜர் ,புதல்வர் இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களையும் பாலைவனத்தில் விட்டு சென்ற பொழுது, நபி அவர்களின் துணைவியார் கேட்ட ஒரே கேள்வி – ©இது இறை கட்டளையா ?
எங்கு புற்பூண்டுகளும் நீரும் உணவும் மனிதர்களும் விலங்குகளும் அறவே இல்லாமல் இருந்ததோ, அங்கு எங்களை விட்டு செல்கிறீர்களே!!!” என்று கேட்கிறார்கள். உடனே இப்ராஹீம் நபி, “ஆம்” என்றார்கள். ஹாஜர் அம்மையார் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டு நேர்மறை சிந்தனைகளை கையாளுகிறார்கள். “அப்படி என்றால், இறைவன் எம்மை கைவிடமாட்டான்” என்று கூறுகிறார்கள்.

இந்த சிந்தனையால் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றம், இன்று மிகப்பெரிய ஒரு இஸ்லாமிய சமூகத்தை உருவாக்கியது மட்டுமல்ல, மக்கமா நகரம் – பன்னாட்டு மக்கள் சங்கமிக்கும் இடமாகவும், இஸ்லாமிய கலாச்சார பண்பாட்டின் கோபுரமாகவும் ,
முழு உலகத்தில் வசிக்கும் முஸ்லிம்களின் கிப்லாவாகவும் (வழிபாட்டு திசையாக ) ஒரு கலங்கரை விளக்காக மாறியது,

ஹாஜர் அம்மையாரின் நேர்மறை சிந்தனையின் வெளிப்பாடே, இந்த ஒரு மிகப் பெரிய மாற்றமும் இன்னும் ஒளிமயமான எதிர்காலமும்.

கனடாவின் எழுத்தாளர் Brian Tracy -பிரியான் டிரேசி தனது பிரபலமான புத்தகமாகிய
“Change your thinking change your life “
“சிந்தனையை மாற்று. அது வாழ்க்கையை மாற்றும் “
என்ற புத்தகத்தில், ‘இந்த நேர்மறையான சிந்தனைகளை, நமது வாழ்வின் வசந்த கால மாற்றத்திற்காக எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்பதை வலியுறுத்திக் கூறுகிறார்.

வில்லியம் ஜேம்ஸ் கூறியதாக ஒரு கூற்றைக் கூறுகிறார்,
“மனோதத்துவத்தில் ஒரு சட்டம் இருக்கிறது. அதாவது, உங்களின் சிந்தனையில், நீங்கள் பின்னால் என்ன ஆக வேண்டும் என்று ஒரு படத்தை வரைகிறீர்கள் என்றால், அதை சிறிது காலம் சிந்தனையில் தக்கவைத்துக் கொண்டால், குறிப்பிட்ட காலத்திற்குப் பின் அதாகவே நீங்கள் மாறி விடுவீர்கள்.”

எதிர்மறையான சிந்தனைகளை தவிர்ப்போம் !!!

நேர்மறை சிந்தனைகளே, ஒளிமயமான எதிர்காலம் !!

அதைத்தான் இஸ்லாம் தவக்குல் என்று கூறுகிறது (அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பது ). நாம் புரியும் காரியங்களில் வெற்றி கொள்ள, இறைவனின் மீது நிலைகுலையாத நம்பிக்கை வைத்து, நாம் செய்ய வேண்டியதை செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுது, இறையருளால் வெற்றி உறுதியாகக் கிடைக்கும்.

فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّٰهِ‌ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ‏

(ஏதாவதொரு விஷயத்தில்) நீர் உறுதியான முடிவுக்கு வந்துவிட்டால், அப்பொழுது அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பீராக! திண்ணமாக, தன்னை முழுமையாகச் சார்ந்திருந்து செயல்படுவோரை அல்லாஹ் நேசிக்கின்றான்.
(அல்குர்ஆன் : 3:159)

எழுத்தாளர்:-உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி

Related Posts

Leave a Comment