சில் மாதங்களுக்கு முன்பே எழுதியிருக்கவேண்டிய பதிவு. இப்பொழுது தான் வாய்த்திருக்கிறது.
முப்பது நோன்பு வந்து விட்டால் போதும். பதினைந்தாம் கிழமை எப்போது வரும் என்றிருக்கும். இரண்டு காரணங்கள். ஒன்று ரமதானின் இரண்டாம் பாகத்தின் கொண்டாட்டங்கள் தொடங்கும். பதினைந்தாம் கிழமை அன்றே வட்டிலப்பம் சுடுவார்கள். எங்கள் வீட்டில் சீனி வட்டிலப்பமும் கருப்பட்டி வட்டிலப்பமும் சுடுவார்கள். (இது எங்களோட பாரம்பரிய இனிப்பு என்று கொண்டாடும் போதே தாய் ஏர்வெசில் எங்களுடைய பாரம்பரிய இனிப்பு என்று இதே வட்டிலப்பத்தை பரிமாறும் போது காற்று இறங்கி விட்டது என்பது உண்மை).
இரண்டாவது காரணம் அன்றைக்கு முளைப்பாரி போடுவார்கள். எனக்கு இரண்டு அக்காள் மார்கள். இரண்டு பேருக்கும் முளைப்பாரி போட்டது எனக்கு நன்றாகவே நினைவிருக்கிறது. பழைய பானையின் வக்கில் கணக்காக கல்லால் தட்டி உடைத்து, அடியில் வைக்கோல் வைத்து அதன் மேல் எருவாட்டித்தூள் இட்டு தண்ணீர் தெளித்தால் முளைப்பாரியின் அடிப்பாகம் தயார். அதன் மேல் வட்டம் வட்டமாக மொச்சை, பச்சைப்பயறு, தட்டைப்பயறு , பார்டருக்கு கடுகு என விதைத்து விட்டு…எப்படி வந்திருக்கிறது என்பதைப்பார்க்க அக்காள் மாருடன் மெச்சில் ஏறி திறந்து பார்க்கும் அந்தப்பரவசம் ( அது இன்னமும் மிச்சமிருக்கிறது..ஒவ்வொரு முறையும் ஏதையாவது பயிர் செய்து விட்டு அறுவடைக்குக்காத்திருக்கையிலும் அறுவடையிலும்)..என்னவோ செய்யும்.
தெருவில் உள்ள எல்லா பெரிய மனுசியாகாத பெண்குழந்தைகளும் புத்தாடை அணிந்து அவரவர் முளைப்பாரியுடன் ஏதாவது ஒரு பொது இடத்தில் கூடுவர். முளைப்பாரியைப்பார்ப்பதற்கும் அதைச்சுற்றி கும்மி அடிப்பதற்கும் பெண்கள் கூட்டம் கூடும்.
ஆண்கள் அனைவரும் பெரு நாள் தொழுகை தொழ பள்ளிக்குக்கிழம்ப..பெண்குழந்தைகள் கிழவிகள் காவல் காரர்கள் புடைசூழ முளைப்பாரியைத்தூக்கிக்கொண்டு பாண்டியன் கிணறுக்கோ ராச வாய்க்காலுக்கோ கிளம்புவார்கள். காவலுக்கு அவர்கள் செல்லும் வழி நெடுக ஆள் நிற்கும். முளைப்பாரி பாட்டும் உண்டு..”பாலூத்தி வளத்தனடி நான் வளத்த கொடிக்கா இப்போ பாலாத்துல போறியேடி நான் வளர்த்த கொடிக்கா” நினைவில் உள்ள பாடல்.
இப்போதெல்லாம் முளைப்பாரி யாரும் இடுவதில்லை. குறைந்த பட்சம் எனது மகளுக்கு அறிமுகப்படுத்துவோம் என்று முடிவு செய்தோம். முளைப்பாரி இட்டு..முன்பு போல் வரவில்லையெனினும் …பரவாயில்லை…நாங்களே அவளைக்கூட்டிக்கொண்டு போய் மேற்கு ராச வாய்க்காலில் ஓடும் தண்ணீரில் விட்டு விட்டு வந்தோம். முளைப்பாரிப்பாட்டு மறந்து போகலாம்…முளைப்பாரி எனும் சொல் நினைவில் நிற்குமே!
நன்றி : சா.காதர்மீரான்
சித்தையன்கோட்டை