வேலூர் புரட்சியின் வித்து ரோஷணி பேகம்.

by Mohamed Anas

வரலாற்றில் யாரும் அறிந்திராத பெயராக மாத்திரமன்றி மாவீரன் மைசூர் சிங்கம் திப்புசுல்தானுடைய வாழ்க்கையோடு தொடர்புடைய இந்த ரோஷணி பேகத்தின் கதை கேட்பவருக்கு ஆச்சரியத்தையும் அவர் மீது ஒருவித அனுதாபத்தையும் ஏற்படுத்தலாம்.

ரோஷணி பேகம் இயல்பில் பும் குஷ்நூர் என்ற பெயருடையவராக இருந்துள்ளார். ஆந்திர மாநிலம் அதோனி கிராமத்தை சேர்ந்த  நாடகக்குழுவில் பிரதான நடனமங்கையாக இருந்தார். அக்காலத்தில் ராஜாக்களின் அரண்மனைகளில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகள் யாவும் ஏதோ ஒரு விசேஷங்களின் நேரத்திலும் வெளிநாட்டு விருந்தினருக்காக அவர்களை மகிழ்விக்க சிறப்பு அழைப்பின் பெயரில் தான் நடனக்குழுவினர் அரச சபைகளுக்கு அழைக்கப்படுவர். அவ்வாறு அரண்மனை மற்றும் கோவில் விழாக்களில் அழைப்புகள் இல்லாத நாட்களில் கிராமங்களுக்கு சென்று பழைய நாடோடிக்கதைகளையும் புராணங்களையும் கூறி நாடகங்கள் போடுவது அவர்களுக்கு வாடிக்கையாக இருந்தது.

அவ்வாறு கிபி.1770ல் ஹைதர் அலியின் மைசூர் ராஜ்ஜியத்திற்கு ஆஸ்த்தான நடனமங்கையாக வந்து சேர்ந்தார் பும் குஷ்நூர். அவரது தங்கையோடு அவர் ராஜ சபை நடனமங்கையாக சேர்ந்த போது இளவரசர் திப்புசுல்தானுக்கு 20 வயது என குறிப்பிடப்பட்டுள்ளது. திப்புசுல்தானின் முதல் மனைவியாக குஷ்நூர் “ரோஷணி” யாக மாற்றப்பட்டார். அரசவையில் அவருக்கு சிறப்பான இடம் கொடுக்கப்பட்டிருந்தது, திப்புவின் மூத்த மகன் ஃபத்தே ஹைதர், ரோஷணி பேகத்திற்கு பிறந்தவர் என்பதும் இந்த குறிப்பில் கூறப்பட்டுள்ள கூடுதல் தகவல். கிபி.1801ல் வரையப்பட்ட ஃபத்தே ஹைதரின் ஓவியம் ஒன்று அவரது தந்தை திப்பு இருபது வயதாயிருந்த போது இருந்ததை நினைவுபடுத்துகிறது (திப்புவிற்கு கதிஜா ஸமானி பேகம் என்கிற மற்றொரு மனைவியும் இருந்தார்)

கிபி.1799ல் திப்புசுல்தான் கொல்லப்பட்ட பிறகு அவரது எஞ்ஜியிருந்த குடும்பத்தாரையும் பெண் வாரிசுகளையும் ஆங்கிலேயர்கள் வேலூர் கோட்டைக்கு குடிமாற்றினர், கிபி.1802ல்  திப்புவின் அரண்மனையில் பணிக்கு இருந்த 550க்கும் மேற்பட்ட பெண்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் மானியம் கொடுக்கப்படும் என ஆங்கிலேய அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்டது. மைசூரின் மற்ற அரண்மனைகளில் இருந்த பணிப்பெண்களும் , திப்புவின் ராணுவத்தில் இருந்த வீரர்களின் மனைவியரும் அவர்களது குழந்தைகளுமாக கிபி.1806வாக்கில் சுமார் 790 பேராக உயரவே அவர்களுக்கு கொடுக்கப்பட்டுக்கொண்டிருந்த நிவாரணத்தொகையில் கையை வைத்தார் மதராஸின் ஆளுநர் வில்லியம் பெண்டிங்.

ஆங்கிலேயர் கொடுத்து வந்த மானியத்தை வைத்து அங்குள்ள பெண்களை நிர்வகிக்கும் பொறுப்பினை ரோஷணி பேகம் பெற்றிருந்த நிலையில் திப்புவின் நான்கு மகள்களுக்கு வேலூர் கோட்டையிலேயே வைத்து கோலாகலமாக திருமணம் முடித்து வைக்கப்பட்டது. மதராஸ் ஆளுநரின் மானியத்தை நிறுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ரோஷிணி கோட்டையினுள் காவலுக்கு நிற்கும் இந்திய சிப்பாய்களை ஆங்கில அரசுக்கு எதிராக செயலாற்ற திட்டம் ஒன்றினை வகுத்தார்.

கிழக்கிந்திய கம்பெனிக்கு ராணுவம் மற்றும் நிர்வாகப்பணியாற்றும் இந்தியர்களை கேவலமாக சித்தரிக்கும் விதமான நாடகம் ஒன்றை அரங்கேற்றினார். இந்த நாடகத்தில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட உடை, தொப்பி மற்றும் ஆங்கிலேயர்களுக்கு அவர்கள் போடும் கூழைக்கும்பிடு ஆகியவையும் கிழக்கிந்திய கம்பெனிக்கு அடிமை வேலை செய்யும் இவர்களுக்கு உணவும் நீரும் கொடுக்க கூடாது, அவர்களுக்கு திருமணம் முடிக்க பெண்ணும் கொடுக்க கூடாது என்பவை வசனப்பாடலாக எடுத்தியம்பப்பட்டது. அவை இந்திய சிப்பாய்களின் குடும்பத்தினர் மத்தியில் பரவி பெரும் அவமானத்தை கொடுத்தது.

இதன் தாக்கம் சிப்பாய்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது என்றும், ஆங்கிலேயர்களால் நாம் அடக்கியாளப்படுகிறோம் என்பதையும் ஆங்கில சிப்பாய்களுக்கு ஒரு மாதிரியான மதிப்புமிகு சம்பளமும், தங்களுக்கு ஒரு மாதிரியான குறைவான சம்பளமும் கொடுக்கப்படுவது அவர்களை சிந்திக்க தூண்டியதாகவும்., கிபி.1806 ஜூலை 9, அந்நாளைய இரவு வேலூர் புரட்சிக்கான தொடக்கப்புள்ளியாக அமையப்பெற்றது, இதில் மதராஸ் மாகாணத்தின் காலாட்படை வீரர்களாக இருந்த ஆங்கில சிப்பாய்கள் 129 பேர் கொல்லப்பட்டனர். இந்த வெற்றியின் அடையாளமாக வேலூர் கோட்டையில் திப்புவின் புலிக்கொடி ஏற்றப்பட்டு ரோஷணி பேகத்தின் மகன் ஃபத்தே ஹைதர், தங்களது அரசராக அறிவிக்கப்பட்டார்.

 இதற்கு பழிவாங்கும் விதமாக ஆங்கிலப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டு இந்திய சிப்பாய்கள் 350 பேரை காவு வாங்கியது பிரிட்டிஷ் அரசு. இந்திய சரித்திரத்தை பொறுத்தவரை இந்த புரட்சிப்போர் “கலகம்” என பெயர் சூட்டப்பட்டு, இராணுவத்தில் ஏற்பட்ட ஒரு சச்சரவு நிகழ்வாக மாத்திரமே சித்தரிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் நாட்டை இழந்து எதிரிப்படையிடமிருந்து மானியம் வாங்கிக்கொண்டிருந்த ஒரு ராணி, தனது உரிமைகள் பறிக்கப்பட்ட காரணத்திற்காக தமக்கு தெரிந்த கலையை வைத்து, நாடகமும் அதற்கான வசனமும் பாடல்களும் தயாரித்து அதன் மூலமாக, எதிரிப்படையில் வேலை செய்த தம் நாட்டு ஆண்களிடையே ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி ஒரு போரை கூட உருவாக்க முடியும் என்பதாகத்தான் தாம் இதனை பார்ப்பதாகவும் இது குறித்த தமது ஆய்வும் இதையே நிலைநிறுத்துவதாகவும்  இக்கட்டுரையை எழுதிய எழுத்தாளரும் ஆராய்ச்சியாளருமான ஜெனிஃபர் ஹோவ்ஸ் அறிவிக்கிறார். இறுதிவரை ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து இறந்து போனார் ரோஷணி .

ஜெனிஃபர் ஹோவ்ஸ் – இவர் பிரிட்டிஷ் லைப்ரரி ஆஃப் விஷுவல் ஆர்ட்ஸின் முன்னாள் காப்பாளர் ஆவார். இக்கட்டுரை பிரிட்டிஷ் நூலகத்தின் லைவ்ஸ் இணையதளத்தில் அன்டோல்டு ஸ்டோரீஸ் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள பல கட்டுரைகளில் இதனையும் இணைத்துள்ளார்.

Journal of the Royal Asiatic Society –

“Tipu Sultan’s female entourage under east india company rule” – Jennifer Howes.

எழுத்தாளர் :- S. Nasrath Rosy (rosyamjath16@gmail.com)

Related Posts

Leave a Comment