வணிகச் சமூகமான தமிழக முஸ்லிம்கள் விவசாயத்தோடு தொடர்பிலிருந்த 2000 க்கு முந்தைய காலங்களில் பொங்கல் திருநாளை இஸ்லாமிய நெறிகளுக்கு உட்பட்டு வீடுகளில் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இனிப்பு பொங்கலும் (பாச்சோறு) கரும்புமாக முஸ்லிம் பிள்ளைகள் கொண்டாடி மகிழ்ந்ததும் ஆடு மாடு வைத்திருந்தவர்கள் வீடுகளில் அதை குளிப்பாட்டி அலங்கரித்து மகிழ்ந்ததும் நீங்கா நினைவுகளாக மனதில் நிற்கின்றன.
இஸ்லாத்தை நிலம் சார்ந்து புரிந்து கொள்ளும் திறனில் அடர்த்தி இன்மையால் எழும் நெருடல் காரணமாக நிலம் சார்ந்த எந்த ஒரு கலாச்சார வழக்கத்தையும் (அது இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைக்கு முரண்படாத வரை) முற்றாக அகற்றிவிடக் கூடாது என்கிறார் பேரறிஞர் யூசுஃப் அல் கர்ளாவி.
அனைத்து அரபு நாடுகளிலும் அந்தந்த மக்களின் இனமரபுக் கேற்ப பருவகாலங்களுக் கேற்ப வேளாண் முறைகளுக் கேற்ப இன்றும் அறுவடைத் திருநாள் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சவூதி அரேபியாவின் அசிர் மாகாணத்தில் மலர்கள் உற்பத்தி அதிகம் நடைபெறுகிறது.அதேபோல அருகிலுள்ள தாயிஃப் நகரத்து ரோஜாக்கள் உலக மலர் சந்தையில் முதன்மை இடத்தை வகிக்கிறது.
அசிர் மாகாணத்தில் ” கஹ்தானீ ” ” ஸஹ்ரானீ ” ஆகிய இரண்டு பழங்குடி சமூகங்கள் தான் அதிகமாக மலர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். இந்த இரண்டு இனக்குழுவினரும் இன்றைய சவூதி அரேபிய சமூகத்தில் ஆதிக்கமிக்கவர்களாக கருதப்படுகின்றனர்.
மக்காவின் இமாமாக இருந்து ” ஹிஸ்னுல் முஸ்லிமீன் ” (முஸ்லிம்களின் அரண்) என்ற பிரார்த்தனை பொக்கிஷங்கள் அடங்கிய நூலை எழுதிய ஸயீத் இப்னு அலீ இப்னு வஹ்ஃப் அல்கஹ்தானீ அவர்கள் இந்த அசிர் மாகாணத்தின் கஹ்தானீ இனத்தைச் சேர்ந்தவர் தான்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதங்களில் மலர் அறுவடை திருவிழாக்கள் அசிர் மலைப் பிரதேசங்களில் வெகு விமர்சையாக நடைபெறுகின்றன. அந்த விழாக்களில் கஹ்தானீ ஸஹ்ரானீ உள்ளிட்ட இனக்குழுக்களின் மார்க்க அறிஞர்களும் முக்கிய தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
தங்களது மக்களோடு ஒன்று கூடி மேளதாளங்களுடன் பாரம்பரிய நடனமாடி கொண்டாடுகின்றனர். அது போர்ச் சமூகமான அவர்களின் பன்னெடுங்கால மரபு என்று கூறுகின்றனர்.(நம்ம ஊர் டான்ஸுடன் இதை இணைத்து புரிந்து கொள்ள கூடாது)
அதேபோல அல்கஸீம் மாகாணத்தின் புரைதா நகரில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் பேரிட்சை அறுவடைத் திருவிழா, அல்ஜோஃப் நகரின் ஆலிவ் அறுவடைத் திருவிழா,அல்ஹஸ்ஸா நகரின் தோட்டக்கலைத் திருவிழா என்று சவூதி அரேபியாவின் மக்கா மதீனா உள்ளிட்ட 13 மாகாணங்களிலும் பல நூற்றாண்டுகளாக அந்தந்த நிலத்தின் பருவம் உற்பத்தி பொருட்கள் சார்ந்து அறுவடைத் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட ஒட்டகப் போட்டி, அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை அழைத்துச் சென்று காட்டிய வீர விளையாட்டுப் போட்டிகள் இவை அனைத்தும் வசந்த காலங்களில் அறுவடைத் திருநாளில் நடைபெற்றவை.
வரலாற்று காலம் தொட்டு அரபு நிலத்தில் ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒவ்வொரு வடிவங்களில் இந்த அறுவடை நாள் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இஸ்லாம் பிறந்த மண்ணில் மக்களின் கொண்டாட்டங்களை எந்த மார்க்க அறிஞரும் தடுக்கவில்லை. தங்களது அறிவுச் செழுமையை கொண்டு அவற்றை இஸ்லாத்தின் வாழ்வியல் முறைகளுக்கு உட்பட்டதாக தான் அமைத்துக் கொடுத்துள்ளார்கள்.
கடந்த 30 ஆண்டுகளாக தமிழக முஸ்லிம் சமூகத்தில் முன்வைக்கப்பட்ட மார்க்க பிரச்சாரங்களில் பெரும்பாலும் மானுடவியலையும் வரலாற்றையும் சமூகவியலையும் கலாச்சார மரபுகளையும் தவிர்த்துவிட்டு வெறுமனே சட்டங்களை மட்டுமே இஸ்லாமாக முன்வைத்ததின் விளைவுகள் தான் இன்று விழாக்கள் கொண்டாட்டங்கள் ஒன்றுகூடி மகிழ்தல் உள்ளிட்ட மனித உள்ளத்தை குளிர்விக்கும் எந்த நடவடிக்கைகளும் இல்லாத இறுக்கமான சமூகமாக தமிழக முஸ்லிம் சமூகம் மாறிவிட்டது.
அதன் கோர விளைவுகளாக சமூகத்திற்குள் பிரிவினைகள் வெறுப்புகள் மணமுறிவுகள் போதைப்பொருள் புழக்கங்கள் இரத்த உறவுகளை தவிர்த்தல் உள்ளிட்ட சமூக உளவியல் சீர்கேடுகள் அதிகமுடையதாக காட்சித் தருகிறது.
இனத்தால் தமிழர்களாக மரபுகளில் ஆழமாக கால்பதிக்கவும் முடியவில்லை. விட்டு விலகவும் முடியவில்லை. இஸ்லாமிய கலாச்சாரம் எது அரபு கலாச்சாரம் எது தமிழ் கலாச்சாரம் எது என்ற எல்லையும் மக்களுக்கு தெரியவில்லை.
சவூதி அரேபிய மண்ணின் மார்க்க அறிஞர்கள் அனைவரும் போற்றுதலுக்குரியவர்கள்.அவர்கள் தங்கள் மக்களை இணக்கமாக மகிழ்ச்சியாக பாரம்பரிய பெருமைகளுடன் ஒன்றுபடுத்தி மார்க்க சட்ட வழிமுறைக்குள் பெரும்பாலும் அமைதியாக வாழ வைத்துள்ளனர்.
இஸ்லாம் மனித வாழ்விற்கு அழகூட்டி மகிவூட்டும் மார்க்கம்.
– CMN Saleem